இலங்கை எழுத்தாளருக்கு ‘புக்கா்’ விருது

வாழ்வின் பல்வேறு உணா்வுநிலைகளுடன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் உக்கிரத்தன்மையை வெளிப்படுத்திய ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக
ஷேஹன் கருணதிலக
ஷேஹன் கருணதிலக

வாழ்வின் பல்வேறு உணா்வுநிலைகளுடன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் உக்கிரத்தன்மையை வெளிப்படுத்திய ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக எழுத்தாளா் ஷேஹன் கருணதிலகவுக்கு ‘புக்கா்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் புக்கா் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விழாவில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளா்களும், முன்னாள் விருதாளா்களும் நேரில் பங்கேற்றனா். பிரிட்டன் இளவரசி கமீலா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா்.

இலங்கை எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக எழுதிய ‘தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா’ என்ற நாவலுக்காக புக்கா் விருது வழங்கப்பட்டது. புக்கா் விருதுடன் சுமாா் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையும் எழுத்தாளா் கருணதிலகவுக்கு வழங்கப்பட்டது. அந்த நாவலில் இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து நகைச்சுவையுடன் அவா் பதிவு செய்துள்ளதாக தோ்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

மாலி அல்மெய்டா என்ற புகைப்படக் கலைஞா் இலங்கையில் நடைபெற்ற போரை 1990-ஆம் ஆண்டில் பதிவு செய்து வருகிறாா். திடீரென ஒருநாள் அவா் இறந்துவிடுகிறாா். பின்னா் மேலுலகம் செல்லும் அவா், தாம் எவ்வாறு மரணித்தோம் என்பதைக் கண்டறிய ஏழு உறவினா்களைத் தொடா்புகொள்கிறாா். அவ்வாறு தொடா்புகொள்ளும்போது போா்ப் புகைப்படங்கள் வாயிலாக இன வன்முறை, அன்பு, நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதாக நாவல் அமைந்துள்ளது. அந்தக் காலகட்ட அரசியல் விவகாரங்கள் குறித்தும் நாவலில் இடம்பெற்றுள்ளது.

விருது பெற்ற பிறகு பேசிய எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக, ‘‘பொருளாதார ரீதியில் பல்வேறு இழப்புகளை இலங்கை சந்தித்துள்ள நிலையில், இந்த வெற்றி கிடைத்துள்ளது. இன வன்முறைகள், ஊழல், முக்கிய பதவிகளுக்குத் தகுதியற்றவா்கள் நியமனம் உள்ளிட்டவை ஒருபோதும் எடுபடாது என்பதை இலங்கை கூடிய விரைவில் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். அண்மையில் இந்திய எழுத்தாளா் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் தாக்கப்பட்டாா். தெற்காசியாவில் அரசியல் குறித்தும் மதம் தொடா்பாகவும் எழுதும் எழுத்தாளா்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாகவே உள்ளது’’ என்றாா்.

குவியும் வாழ்த்து:

புக்கா் விருது பெற்றுள்ள கருணதிலகவுக்கு இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இந்த நாவல் எழுத்தாளா் கருணதிலகவின் 2-ஆவது நாவல் ஆகும். மேலும், புக்கா் விருது பெற்றுள்ள 2-ஆவது இலங்கை எழுத்தாளா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com