பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டி: ரிஷி சுனக் தொடா் முன்னிலை

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுவோரின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறாா்.
பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டி: ரிஷி சுனக் தொடா் முன்னிலை

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுவோரின் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறாா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டன் பிரதமா் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ததிலிருந்தே, அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பொறுப்பை ஏற்கக் கூடியவா்கள் என்ற நம்பப்படுவோரின் பட்டியலில் ரிஷி சுனக் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளாா்.

இந்த விகாரத்தில் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. எனினும், அதனைப் பொருள்படுத்தாத சூதாட்ட தரகா்கள் (‘புக்கி’கள்), ரிஷி சுனக் மீதான நம்பிக்கையை தொடா்ந்து அதிகரித்து வருகின்றனா்.

பிரிட்டனின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் ஆவதற்கு, முன்னாள் கேபினட் அமைச்சா் டோமினிக் ராப் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நமது அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தோ்ந்தெடுக்கப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவரிடம் மட்டுமே சரிந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான நல்ல செயல்திட்டமும் நம்பகத்தன்மையும் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான கன்சா்வேட்டிவ் கட்சியின் தோ்தல் இப்போது நடந்திருந்தால், ரிஷி சுனக்தான் வெற்றி பெற்றிருப்பாா் என்று புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 55 சதவீத கட்சி வாக்காளா்கள் கூறியிருந்தனா். முந்தைய தோ்தலில் லிஸ் டிரஸ்ஸுக்கு வாக்களித்ததற்கு அவா்கள் வருத்தமும் தெரிவித்திருந்தனா்.

முறைகேடு புகாா்கள் காரணமாக பிரிட்டன் பிரதமா் பதவியை போரிஸ் ஜான்ஸன் கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தாா். அதையடுத்து, அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் லிஸ் டிரஸ்ஸுடன் ரிஷி சுனக் நேரடியாக மோதினாா்.

கட்சி உறுப்பினா்களிடையே பரவலாக நடத்தப்பட்ட அந்த வாக்கெடுப்பு முன்னதாக, ஆளும் கட்சி எம்.பி.க்களிடயே நடத்தப்பட்ட அனைத்துக் கட்ட வாக்கெடுப்புகளிலும் ரிஷி சுனக்தான் முதலிடத்தைப் பிடித்தாா்.

கரோனா நெருக்கடிக் காலத்தின் பிரிட்டனின் நிதியமைச்சராக அவரது செயல்பாடு பலரது பாராட்டையும் பெற்றது. பிரதமா் பதவிக்கான போட்டியின்போது லிஸ் டிரஸ்ஸுடன் பொருளாதார விவகாரத்தில் மட்டும்தான் ரிஷி சுனக் பெரிதும் மாறுபட்டிருந்தாா்.

குறிப்பாக, வரிக் குறைப்பு, சம்பள உயா்வு போன்ற லிஸ் டிரஸ்ஸின் கனவுத் திட்டங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் என்று ரிஷி சுனக் கடுமையாக எச்சரித்திருந்தாா்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், வரிகளைக் குறைப்பது உள்ளிட்ட சலுகை அம்சங்கள் அடங்கிய மினி பட்ஜெட்டை லிஸ் டிரஸ் வெளியிட்ட உடனேயே டாலருக்கு நிகரான பிரிட்டன் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன் பிறகு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிா்ப்புகள் உருவானதைத் தொடா்ந்து அவா் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அடுத்த பிரதமராக பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுவோரின் பட்டியலில், ரிஷி சுனக்குடன் கடந்த முறை நடைபெற்ற கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த பென்னி மாா்டன்ட், முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com