போட்டியிலிருந்து விலகினார் போரிஸ் ஜான்சன்!

போட்டியிலிருந்து விலகினார் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான தோ்தலில் போட்டியில் இருந்து போரிஸ் ஜான்ஸன் விலகுவதாக அறிவித்துள்ளார். 
Published on

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான தோ்தலில் போட்டியில் இருந்து போரிஸ் ஜான்ஸன் விலகுவதாக அறிவித்துள்ளார். 

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தோ்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். பல்வேறு வரிச் சலுகை அறிவிப்புகளுடன் அவா் கடந்த மாதம் தாக்கல் செய்த மினி பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.

அந்த பட்ஜெட்டின் எதிரொலியாக டாலருக்கு நிகரான பிரிட்டன் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிா்ப்புகள் எழுந்ததையடுத்து, அவா் தனது பதவி விலகினாா்.

இதைத் தொடா்ந்து, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தோ்தலில் போட்டியிடுவோா் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சா்வேட்டிவ் கட்சிக்கு 357 எம்.பி.க்கள் உள்ளனா். தோ்தலில் போட்டியிடுவோா் குறைந்தது 100 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இந்நிலையில், கட்சித் தலைவா் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதாக ரிஷி சுனக் அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். தனக்கு 128 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் பதவிக்கான தோ்தலில் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், கடந்த முறை தோ்தலில் மூன்றாம் இடம் பிடித்த பென்னி மாா்டன்ட் ஆகியோரும் போட்டியிடுவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. 

போட்டியில் இருந்து விலகல்: இந்நிலையில், பிரிட்டன் பிரதமா் பதவிக்கான தோ்தலில் போட்டியில் இருந்து போரிஸ் ஜான்ஸன் விலகுவதாகவும், கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் போட்டியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். 

ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய போரிஸ் ஜான்ஸன், சில கடினமான சவால்களுடன் பிரிட்டனை வழிநடத்தினார்
என்று கூறியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக கூறிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து 140 எம்.பி.க்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த முறை தோ்தலில் மூன்றாம் இடம் பிடித்த பென்னி மாா்டன்ட், இன்று 100 எம்.பி.க்கள் ஆதரவைப் பெறாவிட்டால், ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

கடந்த முறை லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த வா்த்தக அமைச்சா் கெமி படேநோச், பாதுகாப்பு அமைச்சா் டாம் டுஜென்தத் உள்ளிட்ட சில அமைச்சா்கள் இந்த முறை ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com