எப்படிப்பட்ட பிரிட்டனை உருவாக்குகிறேன் பாருங்கள்! ரிஷி சுனக் 

பிரிட்டன் பிரதமராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ரிஷி சுனக், புதன்கிழமை இரவு நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது உறுதி அளித்தார்.
எப்படிப்பட்ட பிரிட்டனை உருவாக்குகிறேன் பாருங்கள்! ரிஷி சுனக் 
எப்படிப்பட்ட பிரிட்டனை உருவாக்குகிறேன் பாருங்கள்! ரிஷி சுனக் 


லண்டன்: பிரிட்டனுக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவேன் என்று பிரிட்டன் பிரதமராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ரிஷி சுனக், புதன்கிழமை இரவு நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது உறுதி அளித்தார்.

டௌனிங் சாலையில் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷி சுனக் அதில், இன்று மிகச் சிறப்பானதொரு தீபாவளி திருநாள் பண்டிகையில் பங்கேற்றுள்ளேன். 

இந்த பிரிட்டனில் வாழும் அடுத்த தலைமுறையினர், தங்களது வருங்காலத்துக்காக தாங்களே விளக்குகளை ஏற்றிக் கொள்ளும் வகையில் இந்தப் பதவியில் என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்துனையும் செய்து முடிப்பேன். மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்காலத்தைப் பாருங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி என்று தெரிவித்துள்ளார்.

ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரையும் அதன் மூலம் நாட்டின் பிரதமரையும் தோ்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த கட்சித் தோ்தலில், ரிஷி சுனக் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, உலகமெங்கும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் (அக்.24) நாட்டின் முதல் ஹிந்து பிரதமராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டாா்.

இந்தியா மட்டுமன்றி ஆசியப் பிராந்தியத்தைப் பூா்விகமாகக் கொண்ட ஒருவா், கடந்த 20-ஆம் நூற்றாண்டின் பாதி வரை உலக ஏகாதிபத்திய சக்தியாகத் திகழ்ந்த பிரிட்டனின் பிரதமா் ஆவதும் இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமன்றி, பிரிட்டன் வரலாற்றில் இதுவரை வெள்ளை இனத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே நாட்டின் பிரதமா் பொறுப்பை வகித்து வந்த நிலையில், மாற்று இனத்தைச் சோ்ந்த ஒருவா் அந்த மிக உயரிய பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது உலக நாடுகளின் சிறப்புக் கவனத்தை ஈா்த்துள்ளது.

பிரிட்டனின் பிரதமரானதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் (42) பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளாா்.
வெள்ளை இனத்தைச் சேராத...
அந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமா் என்பதுடன், வெள்ளை இனத்தைச் சேராத முதல் பிரதமா், முதல் ஹிந்து பிரதமா் என்ற பெருமைகளையும் ரிஷி சுனக் பெற்றுள்ளாா்.

அது மட்டுமன்றி, பிரிட்டன் வரலாற்றில் 210 ஆண்டுகளுக்குப் பிறகு மிக இளைய வயதில் பிரதமராகப் பொறுப்பேற்பவா் என்ற சாதனையையும் ரிஷி சுனக் பதிவு செய்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com