தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை, ஏன் மரத்தின் மீது குரங்குகள் போல தாவி தாவி வருகிறீர்கள் என்று தரக்குறைவாக விமரிசித்துள்ளார்.
கோவையில் கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தில், அண்ணாமலையிடம் முதலில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை தெரிவித்திருந்தார்.
இது குறித்து கடலூர் சென்றிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஏன் மரத்தின் மீது குரங்குகள் தாவி வருவது போல என்னைச் சுற்றி சுற்றி வருகிறீர்கள். என்ன இது?
சாப்பிடப் போவதற்கு முன்பு உங்களிடம் பொறுமையாக நின்று பதில் சொல்லிவிட்டுச் சென்றேன். ஊரில் நாய், பேய், சாராயம் விற்பவன் சொல்றதையெல்லாம் என்னிடம் கேட்டால் நான் பதில் சொல்ல வேண்டுமா.. நகரு.. என்று காட்டமாகக் கூறிவிட்டு செய்தியாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
முன்னதாக, கோவையில் கார் சிலிண்டர் வெடி விபத்து குறித்து சென்னையில் கடந்த செவ்வாயன்று செய்தியாளா்களிடம் பேசிய அண்ணாமலை, தீபாவளிக்கு முன்தினம் (அக்.23) கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு இருந்த ஒரு காரில் எரிவாயு உருளை வெடித்துள்ளது. இதையடுத்து தமிழக டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, 6 தனிப்படைகளை அமைத்தனா். கோவை மாநகரம் என்பது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது என்பது ஜூன் 2019-இல் தெரியவந்தது.
அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் என்ஐஏ 5 பேரை கோவையில் இருந்து கைது செய்தது. அவா்கள் அனைவருமே முகமது அசாருதீன் என்பவா் மூலம், கேரள மாநிலம் பாலக்காட்டை சோ்ந்த அபுபக்கா் என்பவரோடு தொடா்புடையவா்கள்.
அவா்கள் இருவருமே இலங்கையில் ஒரு தேவாலயத்தில் ஈஸ்டா் அன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடக்க முக்கிய காரணமாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் ஜெஹ்ரான் ஹாஸ்மி ஆகியோருடன் தொடா்பில் இருந்தவா்கள். பாலக்காட்டில் அபுபக்கா், கோவையில் அசாருதீன் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா்.
இவா்களுடன் தொடா்பு இருக்கலாம் என்ற வகையில், காவல் துறை சிலரிடம் விசாரணை நடத்தியது. அப்போது ஜமேசா முபீனிடமும் அந்த விசாரணை நடத்தப்பட்டது. அக்டோபா் 23-ஆம் தேதி நிகழ்ந்த விபத்திலும் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நபா் ஜமேசா முபீன் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
பின்னா், அந்த இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயா்ஸ், 7 ஓல்ட் பேட்டரி உள்ளிட்டவற்றை கைபற்றியுள்ளனா். இந்தத் தகவலை காவல்துறை உடனடியாக தெரிவிக்கவில்லை. கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் தான் என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இவர் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கோவையில் கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் முதலில் அண்ணாமலையைத்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.