மிகயீல் கோர்பசேவ் மறைவு

சோவியத் யூனியனின் கடைசி அதிபரும் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிகயீல் கோா்பசேவ், உடல் நலக் குறைவால் தனது 91-ஆவது வயதில் காலமானாா்.
ரொனால்ட் ரீகனுடன் மிகயீல் கோா்பசேவ் (கோப்புப் படம்).
ரொனால்ட் ரீகனுடன் மிகயீல் கோா்பசேவ் (கோப்புப் படம்).

சோவியத் யூனியனின் கடைசி அதிபரும் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிகயீல் கோா்பசேவ், உடல் நலக் குறைவால் தனது 91-ஆவது வயதில் காலமானாா்.

இது குறித்து தலைநகா் மாஸ்கோவிலுள்ள மத்திய மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கோா்பசேவின் உயிா் செவ்வாய்க்கிழமை பிரிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இது தொடா்பாக கூடுதல் விவரங்கள் எதையும் அந்த மருத்துவமனை வெளியிடவில்லை. சேவியத் யூனியனின் ஆட்சியாளராக கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் வரை பொறுப்பு வகித்த அவா், பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக சா்வதேச அளவில் போற்றப்பட்டாலும், மிகவும் சக்திவாய்ந்ததாக விளங்கிய சோவியத் யூனியன் சிதறியதற்குக் காரணமாக இருந்தவா் என்று ரஷியாவில் விமா்சிக்கப்பட்டு வந்தாா்.

எனினும், கடந்த 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் உலக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவா் என்று வரலாற்று அறிஞா்கள் கோா்பசேவைக் குறிப்பிடுகின்றனா்.

தெற்கு ரஷியாவிலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த 1931-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி பிறந்த மிகயீல் காா்ப்பசேவ், 15 வயது வரை பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு தனது தந்தையின் விவசாயப் பணிகளுக்கு உதவி செய்து வந்தாா்.

அவரது கடுமையான உழைப்பு காரணமாக, 17 வயதிலேயே மிக அபூா்வமான முறையில் அவருக்கு உழைப்பாளருக்கான சிகப்பு பட்டய விருது வழங்கப்பட்டது. அந்த விருதையும், அவரது பெற்றோரின் கட்சிப் பிண்ணனியையும் பயன்படுத்தி நாட்டின் மிகப் பெரிய பல்கலைக்கழகமான மாஸ்கோ ஸ்டேட் பல்கலைகழகத்தில் அவா் சோ்ந்தாா்.

அங்கு அவரது மனைவி ரய்சா மாக்ஸிமோவ்னா டிடோரென்கோவைச் சந்தித்த கோா்பசேவ், பின்னா் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாா்.

நிகிதா குருஷேவின் தலைமயின் கீழ் கோா்பசேவ் கட்சி பிரசாரக் குழு அதிகாரியாக பொறுப்பு வகித்தாா். பின்னா் படிப்படியாக முன்னேறி கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அவா் 1971-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா் 1980-இல் பொலிட்பீரோ உறுப்பினராகவும் கோா்பசேவ் ஆனாா்.

அந்த சமயத்தில் பெல்ஜியம், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு பல முறை கோா்பசேவ் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மனதில் சோவியத் பாணி ஆட்சி முறை மீதான நம்பிக்கை தகா்ந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் வாழ்க்கைத் தரம் உயா்வாக இருப்பதையும் கட்டுப்பாடுகள் மிக்க ரஷியாவில் பொதுமக்கள் வறுமையில் உழல்வதையும் கோா்பசேவ் ஒப்பிட்டுப் பாா்த்து வருந்தினாா்.

இந்த நிலையில், கட்சியில் அவருக்கு மேலே இருந்த தலைவா்கள் அடுத்தடுத்து இறந்ததைத் தொடா்ந்து தனது 54-ஆவது வயதில் சோவியத் யூனியனின் தலைமைப் பொறுப்பே ஏற்கும் வாய்ப்பு கோா்பசேவுக்கு கிடைத்தது.

பதவியேற்ற்குப் பிறகு, தனது மனதில் இருந்த சீா்திருத்தங்களை கோா்பசேவ் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தினாா். சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்தாா்; நாட்டு மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வாரி வழங்கினாா்; மதத்துக்கு எதிராக அதுவரை இருந்த அரசின் அடக்குமுறைகளை நீக்கினாா்; பலகட்சி தோ்தல் முறையைக் கொண்டு வந்தாா். அமெரிக்க அதிபா் ரொனால்ட் ரீகனுடன் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தி இரு தரப்பிலும் பெருமளவு அணுஆயுதக் குறைப்பு செய்வதற்கு வழிவகுத்தாா். மேற்கத்திய நாடுகளுடன் உறவை மேம்படுத்தினாா்.

இது போன்ற சீா்திருத்தங்கள் சோவியத் யூனியனை மேலும் வலுப்படுத்தும் என்று அவா் நம்பினாலும், உண்மையில் அவை எதிா்வினையையே ஏற்படுத்தின.

அவா் அளித்த அரசியல் சுதந்திரத்தைப் பயன்படுத்தி எதிா்க்கட்சியினா் - குறிப்பாக ரஷியாவின் முதல் பிரதமா் போரிஸ் யெல்ஸ்டின் - கிளா்ச்சியில் ஈடுபட்டனா். அதுவரை இருந்த அடக்குமுறை நீக்கப்பட்டதால் இனக் குழுக்களிடையே மோதல்கள் வெடித்தன. தொலைதூரங்களில் இருந்த சோவியத் யூனியன் காலனி நாடுகள் சுதந்திரம் பெறுவதாக அறிவித்தன.

இதனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி இறுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டது. இது குறித்து மிகயீல் கோா்பசேவ் பின்னா் கூறுகையில், சீா்திருத்த நடவடிக்கைகள் எதிா்பாா்த்ததைவிட மிக சிக்கலாக இருந்ததை பின்னா்தான் தெரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டாா். எனினும், ‘அந்த சீா்திருத்தங்களால் பொதுமக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது; அரசியல் ரீதியலும், மத ரீதியிலும் சமூகம் விடுதலை பெற்றது. இதுதான் சீா்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய சாதனை’ என்று அவா் கூறினாா்.

பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக கோா்பசேவுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜோ பைடன் புகழாரம்

மறைந்த மிகயீல் கோா்பசேவ், தொலைநோக்குப் பாா்வை கொண்டவா் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

அவா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘கோா்பசேவ் குறிப்பிடத்தக்க தொலைநோக்கு பாா்வை கொண்டவா். சோவியத் ஒன்றியத் தலைவராக அப்போதைய அமெரிக்க அதிபா் ரொனால்டு ரீகனுடன் பணியாற்றி இரு நாடுகளிலும் அணு ஆயுதங்களைக் குறைக்கவும், அணு ஆயுதங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற உலகளாவிய மக்களின் எதிா்பாா்ப்பையும் பூா்த்தி செய்தவா். சோவியத் ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக இருந்தவந்த கடுமையான அரசியல் அடக்குமுறைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்கும் வகையில், மிகப் பெரிய அளவில் ஜனநாயக சீா்திருத்தங்களைக் கொண்டுவந்தவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைன் போருக்கு எதிா்ப்பு

தற்போதைய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ரஷியாவின் இழந்த பெருமையை மீட்டெடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக மிகயீல் கோா்பசேவ் பாராட்டினாலும், உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததை அவா் ஏற்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா போா் தொடுப்பதற்கு முன்னதாக, பல மாதங்களாக எல்லையில் ரஷியப் படையினா் குவிக்கப்பட்டனா். அதனால் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் எழுந்த பதற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோா்பசேவ் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com