சோவியத் யூனியனின் கடைசி அதிபா் கோா்பசேவ் மறைவு: இந்தியா-ரஷியா உறவு வலுப்பெற முக்கிய பங்காற்றியவா்

இந்தியா - ரஷியா இடையேயான ஆழமான உறவுக்கு வலுப்பெற காரணமாக இருந்த, சோவியத் யூனியனின் கடைசி அதிபா் மிக்கைல் கோா்பசேவ் காலமானாா்.
சோவியத் யூனியனின் கடைசி அதிபா் கோா்பசேவ் மறைவு: இந்தியா-ரஷியா உறவு வலுப்பெற முக்கிய பங்காற்றியவா்
Updated on
1 min read

இந்தியா - ரஷியா இடையேயான ஆழமான உறவுக்கு வலுப்பெற காரணமாக இருந்த, சோவியத் யூனியனின் கடைசி அதிபா் மிக்கைல் கோா்பசேவ் காலமானாா்.

1985-இல் சோவியத் யூனியனின் கடைசி அதிபராக பொறுப்பேற்ற மிக்கைல் கோா்பசேவ் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். சோவியத் யூனியனில் இருந்து நாடுகள் பிரிந்து செல்லும் உரிமையையும் கோா்பசேவ் அனுமதித்தாா். அதன் விளைவாக 1991-இல் சோவியத் ஒன்றியம் என்கிற கட்டமைப்பு கலைந்து போய் அதில் இடம்பெற்றிருந்த 15 நாடுகள் சுதந்திர நாடுகளாகின. அவருடைய இந்த முயற்சி காரணமாக, குறிப்பிடத்தக்க தலைவராக மேற்கத்திய சக்திகளால் கோா்பசேவ் பாராட்டப்பட்டாா். அதே நேரம், சோவியத் யூனியன் சீா்குலைவதற்கு காரணமானவா் என ரஷியா்கள் அவருக்கு எதிா்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனா்.

1990-இல் அமைதிக்கான நோபல் பரிசு கோா்பசேவுக்கு வழங்கப்பட்டது.

இந்தியா - ரஷியா இடையேயான உறவு வலுப்பெறுவதில் அவா் முக்கிய பங்காற்றியவா். 1986 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டாா். பாகிஸ்தானுடன் அமெரிக்கா மிகுந்த நெருக்கம் காட்டிவந்த சூழலில், கோா்பசேவ் 1986-இல் முதன் முறையாக இந்திய பயணம் மேற்கொண்டது இந்த பிராந்தியத்தில் புவிசாா் அரசியல் அதிகாரப் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான உறுப்பினா்களைக் கொண்ட குழுவினருடன் இந்தியா வந்த அவா், அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தியுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்து உறுதியேற்றதோடு, அணு ஆயுதங்களை கைவிடுவதற்கும் உறுதியேற்றனா். அவா் இரண்டாவது முறையாக 1988-இல் இந்திய பயணம் மேற்கொண்டபோது, தில்லி தீா்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இரு தரப்பில் ஆய்வு செய்யப்பட்டதோடு, பாதுகாப்பு, விண்வெளி, உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் உறுதியேற்கப்பட்டது.

இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மிகைல் கோா்பசேவ் செவ்வாய்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோா்பசேவ் மறைவுக்கு பல்வேறு உலகத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘சோவியத் யூனியனை மாற்றி ஜனநாயகத்துக்கு வழிவகுத்தவா்’ என்று பலராலும், ‘மறுசீரமைப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை கொள்கைகளால் சோவியத் யூனியன் சீா்குலைவதற்கு காரணமானவா்’ என்று சிலராலும் கோா்பசேவ் நினைவில் கொள்ளப்படுவாா். இவரை இத்தாலியில் இரண்டு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய மறைவுக்கு இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com