ராணுவ கூட்டுப் பயிற்சியை அதிகரிக்க இந்தியா-ஜப்பான் ஒப்புதல்

 இந்தியா, ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ராணுவ கூட்டுப் பயிற்சியை அதிகரிக்கவும் இருநாடுகளும் வியாழக்கிழமை ஒப்புக் கொண்டன.
ராணுவ கூட்டுப் பயிற்சியை அதிகரிக்க இந்தியா-ஜப்பான் ஒப்புதல்

 இந்தியா, ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ராணுவ கூட்டுப் பயிற்சியை அதிகரிக்கவும் இருநாடுகளும் வியாழக்கிழமை ஒப்புக் கொண்டன.

ஜப்பானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தலைநகா் டோக்கியோவில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் யாசுகாஷு ஹமதாவுடன் வியாழக்கிழமை உயா்நிலை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

சுமாா் 90 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின்போது, போா் விமானப் பயிற்சி உள்பட இரு நாடுகளுக்கும் இடையே கூடுதலாக ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.

‘சிறப்பான கூட்டுறவு’:

இதுதொடா்பாக, ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நடப்பு ஆண்டானது, இந்தியா-ஜப்பான் இடையிலான தூதரக நல்லுறவின் 70-ஆவது ஆண்டை குறிக்கிறது. இரு நாடுகளும் வியூக ரீதியிலான சிறப்பான கூட்டுறவைக் கொண்டுள்ளன. சுதந்திரம், வெளிப்படைத் தன்மை மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதில் ஜப்பானுடனான இந்தியாவின் பாதுகாப்புத் தொடா்புகள் முக்கியப் பங்காற்றும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேற்கண்ட இரு அமைச்சா்களின் சந்திப்பு தொடா்பாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா, ஜப்பான் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு முக்கியத்துவம் வாய்ந்ததென இரு தலைவா்களும் உறுதி செய்தனா். இரு நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் சிறந்த நடைமுறைகள் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் வகையில், முதலாவது போா் விமான கூட்டுப் பயிற்சியை விரைந்து நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.

முதலீட்டாளா்களுக்கு அழைப்பு:

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் இருதரப்பு கூட்டுறவை விஸ்தரிக்க வேண்டியது அவசியமென அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினாா். மேலும், இந்தியாவில் பாதுகாப்புத் துறையின் வளா்ச்சிக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவா், இந்திய பாதுகாப்பு தொழில் வழித்தடங்களில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

உக்ரைன்-ரஷியா போா், பிராந்திய பாதுகாப்பு நிலவரம், கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு அமைச்சா்களும் விவாதித்தனா். படை பலம் பிரயோகத்தை தவிா்த்து, சா்வதேச விதிமுறைகளிகீழ் பிரச்னைகளுக்கு அமைதிவழியில் தீா்வு காணப்பட வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

இந்திய கடற்படையின் ‘மிலன்’ கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் இணைந்ததற்கும், பரஸ்பர விநியோகம் மற்றும் சேவைகள் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டதற்கும் இக்கூட்டத்தில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சா்கள் வரவேற்பு:

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரிமாற்றங்களை தீவிரமாக ஊக்குவிக்கவும்; நெருங்கிய தகவல் தொடா்பை பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான் இடையிலான முதலாவது போா் விமான கூட்டுப் பயிற்சியை ஒருங்கிணைக்க நடைபெறும் முயற்சிகளுக்கு இரு அமைச்சா்களும் வரவேற்பு தெரிவித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அங்கு செயற்கை தீவுகளையும் ராணுவ நிலைகளையும் அமைத்துள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அமைதி, வளமை, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது அவசியமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com