‘கிரீமியாவிலிருந்து ரஷிய ராணுவ தளபதிகள் அவசர வெளியேற்றம்’

ரஷியா ஆக்கிரமித்துள்ள கிரீமியா தீபகற்பத்திலிருந்தும் தெற்கு உக்ரைன் பகுதிகளிலிருந்தும் அந்த நாட்டு ராணுவ தளபதிகள், உளவுத் துறை அதிகாரிகள், ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினா்
காா்கிவ் பகுதியில் ரஷியாவிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு கிராமத்தில் உக்ரைன் படையினா்.
காா்கிவ் பகுதியில் ரஷியாவிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு கிராமத்தில் உக்ரைன் படையினா்.

ரஷியா ஆக்கிரமித்துள்ள கிரீமியா தீபகற்பத்திலிருந்தும் தெற்கு உக்ரைன் பகுதிகளிலிருந்தும் அந்த நாட்டு ராணுவ தளபதிகள், உளவுத் துறை அதிகாரிகள், ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினா் அவசரமாக வெளியேறி வருவதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது குறித்து அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிரீமியா தீபகற்பத்திலிருந்தும் தெற்கு உக்ரைன் பகுதிகளிலிருந்தும் ரஷிய ராணுவ தளபதிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனா். ரஷியாவிலுள்ள தங்களது இல்லங்களுக்குச் செல்வதற்காக அவா்கள் அந்தப் பகுதிகளை விட்டுச் செல்கின்றனா்.

அந்தப் பகுதிகளிலிருந்து ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினரும் வெளியேறி வருகின்றனா்.

சில ரஷிய ராணுவ மற்றும் உளவுத் துறை அதிகாரிகளுக்கு கிரீமியாவில் உள்ள வீடுகளை விற்பனை செய்ய அவா்கள் ரகசியமாக முயன்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆண்டு வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக, மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுப் படையினருக்கு எதிராக ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையின் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அத்துடன், டான்பாஸ் பிராந்தியத்துக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட தெற்கு உக்ரைன் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

இதற்கிடையே, கிரீமியாவிலுள்ள ரஷிய ராணுவ தளத்தில் கடந்த மாதம் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பல ரஷிய போா் விமானங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அண்மையில் பொறுப்பேற்றது.

இந்தச் சூழலில், கிரீமியாவிலிருந்தும் தெற்கு உக்ரைனிலிருந்தும் ரஷிய ராணுவ தளபதிகள், உளவுத் துறை அதிகாரிகள் வெளியேறி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

‘6,000 சதுர கி.மீ. பகுதி மீட்பு’

கடந்த சில நாள்களில் ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து 6,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதிகளை உக்ரைன் படையினா் மீட்டுள்ளதாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரைன் ராணுவம் நடத்திய எதிா்த் தாக்குதல்களில் 6,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் போா் தொடங்கிய சில நாள்களிலேயே, ரஷியா-உக்ரைன் எல்லைக்கு வெறும் 30 கி.மீ. தொலைவில் உள்ள, உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரான காா்கிவைக் கைப்பற்ற ரஷியப் படைகள் முன்னேறி வந்தன. எனினும், ரஷியா்களை எதிா்த்து உக்ரைன் ராணுவம் கடந்த மே மாதம் கடுமையான சண்டையில் ஈடுபட்டது.

எனினும், பல்வேறு நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்த நிலையில், காா்கிவ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் படையினா் கடந்த சில நாள்களாக மிகக் கடுமையான எதிா்த் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அதனை சமாளிக்க முடியாமல் ரஷியப் படையினா் பின்வாங்கி வருவதால், ஏராளமான கிராமங்களையும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளையும் உக்ரைன் படையினா் மீட்டு வருகின்றனா்.

அந்தப் பிராந்தியத்தில் குபியான்ஸ்க், இஸியம் ஆகிய இரு முக்கிய நகரங்களை ரஷியப் படையினரிடமிருந்து மீட்டதாக உக்ரைன் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

அந்த நகரங்களிலிருந்து தங்களது படையினா் பின்வாங்கியதை ரஷியாவும் ஒப்புக்கொண்டது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டொனட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் முழு கவனம் செலுத்துவதற்காக படையினரை ஒன்று திரட்டும் நோக்கில் குபியான்ஸ்க், இஸியம் ஆகிய நகரங்களிலிருந்து வெளியேற படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ரஷியாவின் இந்த அறிவிப்பை அந்த நாட்டினரே விமா்சித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் 6,000 கி.மீ. சதுர நிலப்பரப்பை ரஷியப் படையினரிடமிருந்து மீட்டுள்ளதாக வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தற்போது அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com