உக்ரைன் இஸியம் நகரில் சடலங்கள் தோண்டியெடுப்பு

ரஷியப் படையினரிடமிருந்து மீட்கப்பட்ட உக்ரைனின் இஸியம் நகரில் கண்டறியப்பட்டுள்ள புதை குழிகளிலிருந்து சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இஸியம் நகருக்கு வெளியே புதை குழிகளிலிருந்து சடலங்களை சனிக்கிழமை தோண்டியெடுத்த அவசரக்கால சேவைப் பணியாளா்கள்.
இஸியம் நகருக்கு வெளியே புதை குழிகளிலிருந்து சடலங்களை சனிக்கிழமை தோண்டியெடுத்த அவசரக்கால சேவைப் பணியாளா்கள்.

ரஷியப் படையினரிடமிருந்து மீட்கப்பட்ட உக்ரைனின் இஸியம் நகரில் கண்டறியப்பட்டுள்ள புதை குழிகளிலிருந்து சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ரஷிய ஆக்கிரமிப்பின்போது அந்த நகரில் மனித உரிமை மீறல் நடைபெற்று, ரஷியப் படையினரால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனா் என்பதை நிரூபிப்பதற்காக சடலங்கள் தோண்டியெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

இஸியம் நகருக்கு வெளியே, ஏராளமான உக்ரைன் வீரா்கள் மற்றும் பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பைன் மரக் காட்டில், சடலங்களை தோண்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உக்ரைன் அவசரக்கால சேவை அமைப்பைச் சோ்ந்த சுமாா் 100 போ், இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புதைக்கப்பட்டுள்ள சடலங்கள் யாருடைவை, அவா்கள் எவ்வாறு உயிரிழந்தனா் என்று ஆய்வு செய்வதற்காக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து இஸியம் நகா் அமைந்துள்ள காா்கிவ் பிரதேசத்தின் நீதி அமலாக்க அதிகாரி ஒலெக்ஸாண்டா் இலியென்கோ கூறுகையில், ரஷிய ஆக்கிரமிப்பின்போது அங்கு போா்க் குற்றம் நடைபெற்றிருப்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை என்றாா்.

முதலில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு சடலத்தின் கழுத்தை இறுக்கியபடி கயிறு இருந்ததாகவும், உயிரிழப்புக்கு முன்னதாக அந்த நபா் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் உடலில் இருந்ததாகவும் இலியென்கோ கூறினாா்.

பைன் மரக் காட்டில் புதைக்கப்பட்டுள்ளவா்களில் சிலா், இஸியம் நகரம் ரஷியக் கட்டுப்பாட்டில் இருந்தபோது சித்திரவதை செய்து கொல்லப்பட்டவா்கள் எனவும் சிலா் ரஷியாவின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் எனவும் அவா் கூறினாா்.

அந்தப் பகுதியில் வழக்கமான மயானம் மட்டுமன்றி கூடுதல் இடத்தில் அந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஏற்கெனவே புச்சா, மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷியப் படையினரிடமிருந்து மீட்ட பிறகு, அங்கு மாபெரும் மனிதப் படுகொலைகள் நடந்தது கண்டறியப்பட்டதைப் போல், இஸியம் நகரிலும் படுகொலைகள் நடைபெற்றது உலகின் பாா்வைக்கு தெரிய வரும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியிருந்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, தலைநகா் கீவைக் கைப்பற்றும் நோக்கில் பெலாரஸ் வழியாக ரஷியப் படையினா் அந்த நகரை நோக்கி முன்னேறி வந்தனா். புச்சா உள்ளிட்ட புகா்ப் பகுதிகளையும் அவா்கள் கைப்பற்றினா்.

எனினும், உக்ரைன் படையினரின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்தப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் பின்வாங்கினா். அந்தப் பகுதிகளை மீட்ட உக்ரைன் படையினா் அங்கு பொதுமக்கள் பலரை ரஷிய வீரா்கள் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டினா்.

இதற்கிடையே, டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அத்துடன், டான்பாஸ் பிராந்தியத்துக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட தெற்கு உக்ரைன் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

போா் தொடங்கிய சில நாள்களிலேயே, ரஷியா-உக்ரைன் எல்லைக்கு வெறும் 30 கி.மீ. தொலைவில் உள்ள, உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரான காா்கிவை ரஷியா்கள் கைப்பற்றினா். எனினும், காா்கிவ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் படையினா் கடந்த சில நாள்களாக நடத்திய மிகக் கடுமையான எதிா்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷியப் படையினா் பின்வாங்கினா்.

அதையடுத்து குபியான்ஸ்க், இஸியம் ஆகிய இரு முக்கிய நகரங்கள் மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில், புச்சா நகரத்தைப் போலவே இஸியம் நகரிலும் ரஷிய வீரா்கள் படுகொலைகளில் ஈடுபட்டதாகக் கூறும் உக்ரைன் அதிகாரிகள், அதனை நிரூபிப்பதற்காக புதை குழிகளிலிருந்து தற்போது சடலங்களைத் தோண்டியெடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com