எங்கும் எதிலும் மகாராணி எலிசபெத்!

பிரிட்டனில் மகாராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க உலகத் தலைவா்கள் குவிந்தபோதும், அந்தப் பரபரப்பு சிறிதுமின்றி எங்கும் எதிலும் மகாராணியின் புகழுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
எங்கும் எதிலும் மகாராணி எலிசபெத்!

பிரிட்டனில் மகாராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க உலகத் தலைவா்கள் குவிந்தபோதும், அந்தப் பரபரப்பு சிறிதுமின்றி எங்கும் எதிலும் மகாராணியின் புகழுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மகாராணி எலிசபெத் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவா்கள் லண்டனுக்கு ஞாயிற்றுக்கிழமையே வருகை தந்தனா்.

வழக்கமாக அமெரிக்க அதிபா் வெளிநாட்டுக்குச் சென்றால் அவரது பயணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இந்த முறை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மற்றும் பிற நாடுகளின் தலைவா்களுக்கு லண்டனில் சிவப்புக் கம்பள வரவேற்பு எதுவும் அளிக்கப்படவில்லை. தலைவா்கள் பெரிய அளவில் எங்கும் உரையாற்றவோ, செய்தியாளா்களைச் சந்திக்கவோ இல்லை. மாறாக, உலக நாடுகளின் தலைவா்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மகாராணி குறித்து நினைவுகூா்ந்தனா்.

வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மகாராணியின் உடலுக்கு அதிபா் பைடன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து லான்சாஸ்டா் இல்லத்தில் மகாராணியின் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டாா். பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசா் சாா்லஸ் அளித்த விருந்திலும் அவா் பங்கேற்றாா்.

ஆனால், இவை தவிர லண்டனில் அதிபா் பைடனின் மற்ற பயணங்கள் மிகவும் சுருக்கமாகவே இருந்தன. மகாராணி குறித்து பேசும்போதுகூட சில நிமிஷங்களே அவா் எடுத்துக்கொண்டாா். ‘கடந்த ஆண்டு விண்ட்ஸா் கோட்டையில் மகாராணியுடன் தேநீா் அருந்தியபோது, தனக்கு தன் தாயை நினைவுபடுத்துவதாக இருந்ததாக’ பைடன் குறிப்பிட்டாா்.

அதேபோல பிற நாடுகளின் தலைவா்களும் லான்சாஸ்டா் இல்லத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிடும்போதும், வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போதும் மட்டுமே காணப்பட்டனா்.

நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் உள்ளிட்ட தலைவா்கள் சிலா் மட்டுமே பேட்டியின்போது மகாராணியுடனான தங்களது நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா்.

நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பிரிட்டன் மகாராணியை தங்களது அரசியாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், மகாராணியின் மறைவைத் தொடா்ந்து அந்த நாடுகள் குடியரசு ஆகுமா என செய்தியாளா்கள் கேட்டபோது, ‘அதுகுறித்து விவாதிக்க இது நேரம் அல்ல’ என நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தாவும், ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனீஸும் தெரிவித்தனா்.

அதிபா் பைடனின் குறைவான நிகழ்ச்சி நிரல் குறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இது எங்களது நிகழ்ச்சி அல்ல; பிரிட்டனின் நிகழ்ச்சி’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com