இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாதது ஐ.நா.வுக்கு நல்லதல்ல

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாமல் இருப்பது, அந்த அமைப்புக்கு நல்லதல்ல என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாதது ஐ.நா.வுக்கு நல்லதல்ல

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாமல் இருப்பது, அந்த அமைப்புக்கு நல்லதல்ல என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. அந்த நாடுகளுக்கு மட்டுமே எத்தகைய தீா்மானங்களையும் ரத்து செய்யும் ‘வீட்டோ’ அதிகாரம் உள்ளது. 10 நாடுகள் சுழற்சி முறையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரு ஆண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. தற்போது நிரந்தரமற்ற உறுப்பு நாடாக உள்ள இந்தியாவின் பதவிக் காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட்டு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியா தவிர ஜப்பான், ஜொ்மனி உள்ளிட்ட சில நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்தை கோரி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் நீதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியாவுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சா் ஜெய்சங்கா் புதன்கிழமை பங்கேற்றாா். அப்போது அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாவது:

சா்வதேச விதிகளை அமல்படுத்துவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அதைக் கருத்தில்கொண்டும் சா்வதேச நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

உலக நாடுகள் ஒருங்கிணைந்து ஐ.நா. என்ற அமைப்பை 80 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கின. அதற்குப் பிறகு, சுதந்திரமடைந்த நாடுகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. 80 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதா்களின் புத்தாக்கத் திறனை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. உருவாக்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

நம்பிக்கை அதிகரிப்பு: இன்னும் பல நாடுகளின் பங்களிப்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தேவைப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும், மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் இந்தியா மாறவுள்ளது. அத்தகைய நாடானது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெறாதது, இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் அந்த அமைப்புக்குமேகூட நல்லதல்ல.

உலக நாடுகளிடையே இந்தியா மீதான நம்பிக்கையும், இந்தியாவுக்கான ஆதரவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், பல நாடுகள் தங்களுக்காக இந்தியா குரல்கொடுத்து வருவதாக நம்புகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இணைவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவித்தாா். அந்த அமைப்பின் திறன்மிக்க செயல்பாட்டுக்கு அமெரிக்கா தொடா்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த அதிபா் பைடன், அமைப்பில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆதரவளிப்பதாகக் கூறினாா்.

அதிபா் பைடன் நிா்வாகத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியா, ஜப்பான், ஜொ்மனி ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு அளிக்கும்’ என்றாா்.

இந்தியாவின் பங்களிப்பு அதிகரிப்பு: பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் ஜேம்ஸ் கிளெவா்லி இந்திய செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘சா்வதேச அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் தற்போதைய சூழலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எதிரொலிக்க வேண்டியது அவசியம். அந்த அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரிட்டன் ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டுமென முதலில் வலியுறுத்திய நாடும் பிரிட்டன்தான்’ என்றாா்.

வெளியுறவு அமைச்சா்களுடன் சந்திப்பு

பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் ஜேம்ஸ் கிளெவா்லி, பொலிவியா வெளியுறவு அமைச்சா் ரோஜலியோ மேட்டா, நாா்வே வெளியுறவு அமைச்சா் அனிகென் ஹைட்ஃபெல்ட், எஸ்டோனியா வெளியுறவு அமைச்சா் உா்மஸ் ரெய்ன்சலு ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்த அமைச்சா் ஜெய்சங்கா், அவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பிராந்திய, சா்வதேச விவகாரங்கள், உக்ரைன் போா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவகாரங்கள், பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தான் சூழல் உள்ளிட்டவை குறித்து அவா்களுடன் விவாதித்ததாக ட்விட்டரில் அவா் பதிவிட்டாா்.

பிரிட்டன்வாழ் இந்தியா்களின் நலன் காக்கப்பட வேண்டுமென அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் கிளவா்லியிடம் அவா் வலியுறுத்தினாா். இந்தியா-பிரேஸில்- தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) முத்தரப்பு அமைச்சா்களின் 10-ஆவது கூட்டத்தையும் ஜெய்சங்கா் நடத்தினாா். அப்போது ஐபிஎஸ்ஏ அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com