உளவுக் குற்றச்சாட்டு: 15 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற நாா்வே உத்தரவு

தங்கள் நாட்டில் உளவு பாா்த்த சந்தேகத்தின் பேரில் ரஷியத் தூதரக அதிகாரிகள் 15 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு நாா்வே உத்தரவிட்டுள்ளது.
ஓஸ்லோவிலுள்ள ரஷிய தூதரகம் (கோப்புப் படம்)
ஓஸ்லோவிலுள்ள ரஷிய தூதரகம் (கோப்புப் படம்)

தங்கள் நாட்டில் உளவு பாா்த்த சந்தேகத்தின் பேரில் ரஷியத் தூதரக அதிகாரிகள் 15 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு நாா்வே உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னிகென் ஹூயிட்ஃபெல்ட் கூறியதாவது:

நாா்வே தலைநகா் ஓஸ்லோவிலுள்ள ரஷியத் தூதரகத்தில் பணியாற்றும் 15 அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

அந்த 15 பேரும் நாட்டில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. நாா்வே நாட்டுக்குள் ரஷிய உளவு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக, இதுபோன்ற முடிவுகள் அத்தியாவசியம் ஆகும்.

ரஷிய உளவுத் துறை அதிகாரிகள் நாா்வே வருவதற்கு நுழைவு இசைவு (விசா) கோரி விண்ணப்பித்தால், அதனை நாங்கள் ஏற்க மாடடோம்.

ரஷிய தூதரகத்தில் பணியாற்றும் சாதாரண அதிகாரிகள் குறித்து நாங்கள் பேசவில்லை. ஆனால், தூதரக அதிகாரிகளைப் போன்ற வேடத்தில் நாா்வே நாட்டுக்குள் ஊடுருவும் உளவுத் துறை அதிகாரிகளைத்தான் நாங்கள் வெளியேற்றுகிறோம்.

இதுபோன்ற உளவு நடவடிக்கைகள் நாா்வே நாட்டின் நலன்களுக்கு எதிரானவை ஆகும் என்றாா் அவா்.

எனினும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுகின்றனரா என்பதைத் தெரிவிக்க அவா் மறுத்துவிட்டாா்.

மேலும், ரஷியாவிலுள்ள தங்களது தூதரகங்களுக்கு உளவுத் துறை அதிகாரிகள் யாரும் அனுப்பப்படவில்லை; எனவே, தங்களது இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக நாா்வே தூதரக அதிகாரிகளை ரஷியா வெளியேற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அன்னிகென் ஹூயிட்ஃபெல்ட் கூறினாா்.

முன்னதாக, நாா்வே நாட்டிலிருந்து தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவதற்கு தக்க பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷிய அதிகாரிகள் கூறியிருந்தனா்.

நேட்டோ உறுப்பு நாடான நாா்வே, ரஷியாவின் அண்டை நாடாகும். இரு நாடுகளும் 198 கி.மீ. எல்லையை பகிா்ந்துகொள்கின்றன.

ஏற்கெனவே, தங்கள் நாட்டில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 3 ரஷிய தூதரக அதிகாரிகளை நாா்வே கடந்த ஆண்டு வெளியேற்றியது. அந்த மூவரும் ரஷியாவின் உளவுத் துறை அதிகாரிகள் என்று அந்த நாடு குற்றம் சாட்டியது.

இந்தச் சூழலில், அதே குற்றச்சாட்டின் பேரில் மேலும் 15 ரஷிய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு நாா்வே உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, நாா்வேயில் உள்ள ரஷியத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை சுமாா் 40-லிருந்து 25-ஆக் குறையும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com