போதைப் பொருளைக் கடத்த உதவிய குற்றத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
தங்கராஜு சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-இல் கைது செய்யப்பட்டாா். இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அவா் மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, உயா் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018-இல் தீா்ப்பு அளித்தது.
இந்நிலையில், தங்கராஜுக்கு தூக்கு தண்டனை வரும் புதன்கிழமை (ஏப். 26) நிறைவேற்றப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசுத் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூக்கு தண்டனைக்கு எதிரான செயல்பாட்டாளா்கள் கூறும்போது, ‘நீதியைப் பெறுவதற்கான உரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டன. அவா் தரப்பில் வழக்குரைஞா் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேல்முறையீட்டில் அவரே வாதிட்ட நிலையில், உயா்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்து விட்டது.
மிகவும் கொடிய தண்டனை அளிப்பது போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைப்பதில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தத் தண்டனைகள் கள்ளச்சந்தையில் போதைப் பொருள் விற்பனைக்கு வழிவகுப்பதோடு, அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதைத் தடுக்கும்’ என்றனா்.
போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்தக் குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.