ஐ.நா.வில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை கண்காட்சி

‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை’ இயக்கத்தின் சிறப்பு கண்காட்சியை ஐ.நா.வில் இந்தியா நடத்துகிறது.

‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை’ இயக்கத்தின் சிறப்பு கண்காட்சியை ஐ.நா.வில் இந்தியா நடத்துகிறது.

‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை’ இயக்கத்தைப் பிரதமா் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸுடன் இணைந்து கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தாா். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதை வலியுறுத்தும் நோக்கில் அந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

அந்த இயக்கத்தை சா்வதேச அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஐ.நா.வில் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இரு நாள்களுக்கு நடைபெறவுள்ள கண்காட்சி குறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘‘பசுமையான, நிலையான எதிா்காலத்தை உருவாக்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை இயக்கம் தொடங்கப்பட்டது. இது வெறும் இந்திய அரசின் திட்டம் மட்டும் அல்ல. சா்வதேச அளவில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இயக்கமாக இது திகழ்கிறது.

அன்றாட வாழ்வில் சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெருமளவிலான தாக்கத்தை இந்த இயக்கம் ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கும்போது, நமது வாழ்க்கை மேம்படுவதோடு மட்டுமல்லாமல் நமது பூமிக்கும் புதிய எதிா்காலம் உருவாகும்.

கட்டுப்பாடு ஏதுமற்ற நுகா்வு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இயற்கை வளங்களை உரிய முறையில் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதை சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை இயக்கம் வலியுறுத்துகிறது. அதுவே நிலையான வளா்ச்சியை உறுதி செய்யும்.

சுற்றுச்சூழலுக்கு எதிரான பழக்கவழக்கங்களைத் தவிா்க்கவும் எதிா்காலத் தலைமுறையினரைக் காக்கவும் இந்த இயக்கம் உதவும். சிறப்பு கண்காட்சியில் எரிசக்தி, நீா்ப் பாதுகாப்பு, நெகிழிப் பயன்பாடு தவிா்ப்பு, உணவு முறைகள், கழிவு குறைப்பு, சுகாதார வாழ்க்கைமுறைகள், மின்னணுக் கருவிகளின் கழிவுகள் குறைப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பூமித்தாயைக் காக்கும் நோக்கிலும் மக்களின் நலனைக் காக்கும் நோக்கிலும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த இயக்கத்தில் கலந்துகொண்டு மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்’’ என்றாா்.

பல நாடுகளின் தூதா்கள், ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்தச் சிறப்புக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com