2030-க்குள் எய்ட்ஸ் நோய்க்கு முடிவுரை - உலக சுகாதார அமைப்பு

2030 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர ஒன்றிணைந்து செயலாற்ற உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

2030 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர, கண்முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு உலகம் முழுவதும், குறிப்பாக தென்கிழக்காசிய பிராந்தியத்திலுள்ள உறுப்பினர் நாடுகளும், சமூகங்களும் தொடர்ந்து ஒத்துழைப்பை வளர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

டிசம்பர் 1, சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கான  இயக்குநர் டாக்டர்  பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்திருப்பதாவது, உலகம் முழுவதும் 3.90 கோடி(39 மில்லியன்) மக்கள், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும், சுமார் 13 லட்சம்(1.3 மில்லியன்) பேர் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதேவேளையில், கடந்த ஆண்டு, சுமார் 6.30 லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர் என்றும், தென்கிழக்காசிய பகுதிகளில் தோராயமாக 39 லட்சம்(3.9 மில்லியன்) மக்கள் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது உலகம் முழுவதும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 சதவிகிதம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  

தென்கிழக்காசிய பகுதிகளில் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.10 லட்சம் பேர் புதிதாக ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 85 ஆயிரம் பேர் எய்ட்ஸ் தொடர்பான காரணங்களால் உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர் என்றும், இது உலகம் முழுவதும் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தவர்களில் 13 சதவிகிதம் என்றும் தெரிய வந்துள்ளது.  

எனினும், கடந்த பத்தாண்டுகளில், தென்கிழக்காசிய பகுதிகளில்  ஹெச்.ஐ.வி தொற்றால் பாதித்தோர் விகிதமும், உயிரிழந்தோர் விகிதமும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை கண்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி தொற்றால் புதிதாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 1.10 லட்சம், அதாவது பாதியாக குறைந்துள்ளது.

அதேபோல,  2010ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி தொற்றால் 2.30 லட்சம் பேர் உயிரிழப்பைச் சந்தித்த நிலையில், 2022ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 85 ஆயிரமாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில், புதிதாக ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டோரில், தோராயமாக நான்கில் ஒரு பங்கு(25 சதவிகிதம்) பேர், இளம் வயதைச் சார்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி தென்கிழக்காசிய பகுதிகளின் பல நாடுகளிலும் புதிதாக ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படுவோரில், தோராயமாக பாதி பேர்(50 சதவிகிதம்),  இளம் வயதைச் சார்ந்தவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. 

மேலும் தென்கிழக்காசிய பகுதிகளில் புதிதாக ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படுவோரில், 95 சதவிகிதம் பேர் செக்ஸ் தொழிலாளர்கள், போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கமுடையவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், மாற்று பாலினத்தவர்கள் மற்றும் அவர்களுடன் உடலுறவு கொள்பவர்கள் என  டாக்டர்  பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.  

எய்ட்ஸை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், மேற்கண்ட ஆபத்தான பிரிவு குழுக்களைச் சேர்ந்த நபர்கள், ஹெச்.ஐ.வி தொற்றுடன் வாழ்பவர்கள் பாதுகாப்பான முறைகளை கையாள்வதில் அதிகம் கவனம் செலுத்துவது அவசியம் என்றும்,  ஒருங்கிணைந்த பிராந்திய செயல் திட்டத்தை அமல்படுத்துவதில் வலுப்பெற்ற சமூகங்களின் பங்கு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எய்ட்ஸை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், பல்வேறு முக்கிய பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.    சட்டங்கள், விதிகள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் மீது சமூகத்தில் நிலவும் அச்சம், மோசமான பார்வை மற்றும் அவர்களை தள்ளி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் உலக நாடுகள் தொடர்ந்து சீர்திருத்தம் செய்வதும் அவசியம்.

இந்த நிலையில், ஹெச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை அமல்படுத்துதல், திட்டமிடுதல் மற்றும் பட்ஜெட் தயாரித்தல் ஆகிய நடவடிக்கைகளை இளம் வயதினர் தலைமைப் பொறுப்பபேற்று நடத்த வேண்டும்.
 
மேலும், உலக நாடுகள் ஹெச்.ஐ.வி தொற்று உள்பட வைரல் ஹெப்பாடிடிஸ், பாலியல் தொடர்பான தொற்றுகள் மற்றும் பிற தொற்றுநோய்களுக்கான ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிசம்பர் 1, சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் இல்லா சமூகத்தை, உலகை உருவாக்க வேண்டும் என்ற  இலக்கை அடைவதற்கான முயற்சியை உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று  டாக்டர்  பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com