செய்யறிவு, பாரத்... 2023-ல் பிரபலமான சொற்கள்!

முடியப் போகும் 2023 ஆம் ஆண்டில் பல்வேறு மொழிகளில் பிரபலமான  சொற்கள் என்னென்ன? பட்டியல் இதோ...
2017 இந்தியா- தென்னாபிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டியில் பாரத் என்கிற சொல் அச்சிடப்பட்ட தேசியக் கொடியைப் பிடித்திருந்த ரசிகர்கள் (கோப்பு) | AP
2017 இந்தியா- தென்னாபிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டியில் பாரத் என்கிற சொல் அச்சிடப்பட்ட தேசியக் கொடியைப் பிடித்திருந்த ரசிகர்கள் (கோப்பு) | AP

முடியப் போகிறது 2023 ஆம் ஆண்டு!

2023 ஆம் ஆண்டு நிறைவுறும் நேரத்தில், கடந்து வந்திருக்கும்  ஆண்டைப் பின்நோக்கி, நம்மைச் சுற்றி நடந்திருப்பதைக் காண்பதற்கான வாய்ப்பாக, ஸ்பாட்டிஃபை செயலியில் தொடங்கி கூகுள் வரை இந்த ஆண்டு பிரபலமானவற்றின் பட்டியல்களை வெளியிடத் தொடங்கியுள்ளன.

இந்த வரிசையில் 2023-ல் பிரபலமான சொல் என எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சொற்களைப் பட்டியலிட்டுள்ளது பன்னாட்டு செய்தி நிறுவனமான அசோசியேடட் பிரஸ்.

இந்த ஆண்டு நாம் எல்லோரும் எங்கேனும் கேட்டிருக்கும் ஒரு சொல் -  செய்யறிவு! யாருக்கும் மாற்றுக் கருத்தே இல்லை.

செய்யறிவு (ஏஐ)

மனிதர்களை மற்ற இயற்கையின் படைப்பில் இருந்து வேறுப்படுத்தும் நுண்ணறிவைச் செயற்கையாக உருவாக்குகிற இந்த வளர்ச்சியைக் குறிக்கும் ஏஐ அல்லது செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) என்கிற சொல் இந்த ஆண்டுக்கானது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

மரியம் - வெப்ஸ்டர் புத்தக வெளியீட்டு நிறுவனம் ஆதன்டிக் (மெய்யானது) என்கிற சொல்லையும் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம்  ‘ரிஸ்’ என்கிற சொல்லையும் 2023-க்கானதாகத் தேர்வு செய்துள்ளன.

ரிஸ் - நவீன தலைமுறையால் அதிகம் பயன்படுத்தப்படுகிற இந்த சொல்லின் பொருள், மற்றொருவரை ஈர்க்கும் அல்லது தன்வயப்படுத்தும் ஒருவரின் திறன் என்பதாகும்.

இவை தவிர இன்னும் சில சொற்களும் அந்தந்த பிராந்திய அளவில் பிரபலமானவையாக உள்ளன.

சித்திரெழுத்து ‘சை’ | AP
சித்திரெழுத்து ‘சை’ | AP

பாரத்

இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட இரவு உணவுக்கான அழைப்பில்  ‘பாரத்’ என்கிற சொல், இந்திய நாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

140 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு தன்னைத் தன்னுடைய புராதன சமஸ்கிருத பெயரால் அடையாளப்படுத்த விரும்புகிறதா என்கிற கேள்வி எழுந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் நகர்வு இது என்பது பலரின் கருத்து. காலனிய ஆதிக்கத்தின் களங்கத்தில் இருந்து நாட்டை மீட்கும் மாற்றம் என மோடியின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்தாலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு இது அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்தது.

சர்வதேச அளவில் வெவ்வேறு இடங்களில் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அதிகாரபூர்வ பெயர் மாற்றம் நிகழவில்லை.

அமெரிக்காவில் பறந்த சீன பலூன் | AP
அமெரிக்காவில் பறந்த சீன பலூன் | AP

மற்றவை 

ஆஸ்திரேலியாவில், ஒரு குடும்பத்துக்குள் பெரியவர்களின் செல்லப் பிள்ளையின் பெயரைக் கடவுச்சொல்லாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தைக் குறிக்கும் பொருட்டு ‘பாஸ்வேர்டு சைல்ட்’ என்கிற சொல் பிரபலமாகி உள்ளது. பாம்பைக் குறிப்பிடும் ‘ஸ்னேக் நூடுல்’ என்கிற சொல், இந்த ஆண்டின் பிரபலமான சொல்லாக அந்நாட்டில் குறிப்பிடப்படுகிறது.

கென்யாவில் 400-க்கும் அதிகமான பேரின் இறப்புக்குக் காரணமான பாதிரியார் உச்சரித்த சொல்  ‘கிடவரம்பா’ (உங்களை வேட்டையாட அது மீண்டும் வரும்) இந்தச் சொல்லைக்கொண்டு கென்யாவின் அரசியல் திருப்பங்களையும் சூழலையும் அடையாளப்படுத்தலாம் என்கிறார்கள்.

அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன் பறந்த நிகழ்வைக் குறிப்பிடும்  ‘ஸ்பை பலூன்’, ஜப்பானில் ராணுவப் பலத்தை அதிகரிக்க வரிகள் உயர்த்தப்பட்ட நிகழ்வைக் குறிக்க,  ‘வரிகள்’ என்கிற பொருளில் ‘சை’ என்ற ஜப்பானிய சித்திர எழுத்து ஆகியவை பிரபலமாகவுள்ளன.

மத நம்பிக்கையற்றவர்களின் கூடுகை | AP
மத நம்பிக்கையற்றவர்களின் கூடுகை | AP

உலகம் முழுவதும் எந்தவித மதத்தையோ அமைப்பையோ சார விரும்பாத இளைஞர்களைக் குறிப்பிடும் ’நன்ஸ்’ (எதுவுமற்றவர்கள்) என்கிற பதம் அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, ஜப்பான், உருகுவே உள்ளிட்ட நாடுகளில் பிரபலமானதாக உள்ளது.

தைவானின் இந்தாண்டு பிரபலமான சொல்லாகக் குறிப்பிடப்படுகிற  ‘ஷான் தவோ ஹெள ஜி’ என்பது ஒரு கதையோடு தொடர்புடையது.

யூடியூபரான ”ரோட்மங்கி’ என்கிற இருசக்கர வாகனப்பிரியர் தனது காதலியின் இருசக்கர வாகனத்தை தரம் உயர்த்திக் கொடுக்க தன்னுடைய ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவு செய்துள்ளார். அந்தப் பெண் அவரை ஏமாற்றிவிட்டு செல்லவே இவர் கடனாளியாகி மீண்டும் சேமிப்பைத் தொடங்கியுள்ளார். நண்பர்களிடமிருந்து விலகி வாழ்ந்தவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இவரின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

தைவானின் மிகக் குறைவான ஊதியம், நீண்ட நேர பணிச் சூழலை இந்தப் பதம் குறிப்பிடுகிறது.

பிரான்ஸில்,  ‘யாருக்குத் தெரியும்?’ என்கிற பொருளிலான சொல்லை நவீன தலைமுறையினர் தங்களின் மூத்தவர்களிடம் பகடியாகப் பயன்படுத்துகிற போக்கைக் காட்டும் ’வாட்கூபே’ என்கிற பதம் இந்தாண்டில் வெகு பிரபலம்.

2024-ல் என்னென்ன சொற்கள் முன்னுக்கு வரும்? யாருக்குத் தெரியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com