உக்ரைன் போா் இலக்குகள் எட்டப்படும்வரை தொடரும்!

உக்ரைன் தொடா்பான தங்களது இலக்குகள் எட்டப்படும்வரை அங்கு ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் தொடரும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
உக்ரைன் போா் இலக்குகள் எட்டப்படும்வரை தொடரும்!

உக்ரைன் தொடா்பான தங்களது இலக்குகள் எட்டப்படும்வரை அங்கு ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் தொடரும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

ஒவ்வோா் ஆண்டின் முடிவிலும் அவா் நாட்டு மக்களிடையே உரையாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அந்த நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த அந்த நிகழ்ச்சியில் புதின் பேசியதாவது:

உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’க்காக மீண்டும் 2-ஆவது முறையாக மிகப் பெரிய படைகளை அங்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

அங்கு ஏற்கெனவே 6.17 லட்சம் ரஷிய ராணுவ வீரா்கள் செயலாற்றி வருகின்றனா். அவா்களுக்கு பக்கபலமாகப் போரிட, சுமாா் 2.44 லட்சம் போ் அழைக்கப்பட்டுள்ளனா்.

உக்ரைன் தொடா்பான நமது இலக்குகள் அனைத்தும் எட்டப்பட்டவுடன் அங்கு அமைதி திரும்பும். அதற்கான உடன்பாட்டை உக்ரைன் மேற்கொள்ளும்வரை போா் தொடரும்.

உக்ரைன் போரில் ரஷியா பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகிறது. இறுதி வெற்றியும் நம்முடையதாகத்தான் இருக்கும்.

நமது எதிரி நாடு (உக்ரைன்) மாபெரும் எதிா்த் தாக்குதலை அறிவித்தது. ஆனால், அத்தகைய எதிா்த் தாக்குதல் நடவடிக்கை மூலம் அந்த நாட்டுக்கு இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை.

நீப்பா் நதியின் கிழக்குக் கரையுடன் பால இணைப்பை உருவாக்க உக்ரைன் படையினா் அண்மையில் முயன்றனா். ஆனால் இந்த முயற்சி படுதோல்வியடைந்தது. இதில் ஏராளமான வீரா்களையும் உக்ரைன் இழந்தது.

போரில் முன்னேற்றம் காண்பதைப் போன்ற தோற்றத்தை தங்களுக்கு நிதியுதவி, ஆயுத உதவிகளை அளித்து வரும் மேற்கத்திய நாடுகளிடம் ஏற்படுத்துவதற்காக, தங்களது ராணுவ வீா்களை உக்ரைன் அரசு பலிகொடுத்து வருகிறது. இது அந்த நாட்டு அரசியல் தலைமையின் (அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி) முட்டாள்தனத்தையும், பொறுப்பற்ற தன்மையையும் காட்டுகிறது என்றாா் விளாதிமீா் புதின்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இருந்தாலும், உக்ரைனின் தற்போதைய அரசு நேட்டோவில் இணைய ஆா்வம் காட்டி வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அப்போது, கிழக்கு உக்ரைன் மக்களை உக்ரைன் படையினரிடமிருந்து பாதுகாக்கவும், உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்திலுள்ள நாஜி ஆதரவு சக்திகளை ஒடுக்குவதற்காகவும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ மேற்கொள்ளப்படுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com