நார்வே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வைகிங் கால கப்பல்

நார்வே நாட்டில் ஓஸ்பெர்க் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வைகிங் இன மக்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1921c24-boat054458
1921c24-boat054458
Published on
Updated on
2 min read

நார்வே நாட்டில் ஓஸ்பெர்க் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வைகிங் இன மக்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எட்டாம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை ஸ்வீடன், நார்வே, பின்லாந்து மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளில் வாழ்ந்து வந்த வைகிங்குகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்று அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டிருப்பது வரலாற்றாய்வாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.

மிக அழகாக வடிவமைக்கப்பட்ட வைகிங் கப்பல் நார்வேயில் உள்ள ஓஸ்பெர்க் பண்ணையில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது, ஒரு பெரிய அகழ்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது, இது 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓஸ்பெர்க் பண்ணைப் பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்களால் மிக நுட்பமாக இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வைகிங்குகளின் கலைப் படைப்பையும், கப்பல் கட்டும் வல்லமையையும் பிரதிபலிப்பதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

வைகிங்குகள் என்றால், அண்டை நாடுகளிடமிருந்து  பொருள்களையும் பெண்களையும் கொள்ளையடித்துச் செல்வோராகவே உருவகப்படுத்தப்பட்டிருந்தனர். 

ஆனால், அவர்களது உண்மை முகம் என்ன, அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்று உலகுக்கு அறியச் செய்ய அகழ்வாராய்ச்சிக் குழுவினர் பல ஆண்டுகாலமாக இப்பகுதியில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த வைகிங் என்ற வார்த்தையின் பொருளுக்கே பல சர்ச்சைகள் இருக்கிறதாம். ஒரு மொழியில் இதனை மொழிபெயர்த்தால் கொள்ளையர் என்று பொருள் படுமாம். மற்றொரு மொழியிலோ கடல் சாகசப் பயணங்களை மேற்கொள்வோர் என்று பொருள்வருகிறதாம். இது இரண்டிலுமே இவர்கள் கெட்டிக்காரர்கள்தானாம். அன்றைய காலக்கட்டத்தில் இவர்களது தாக்குதலுக்கு இரையாகாத கடல் நகரங்களே இருந்ததில்லையாம்.  இவர்களுக்காகவே பல நாடுகள் கடல்பகுதியில் கோட்டைகளைக்கூட எழுப்பினார்களாம். 

இத்தனைக்கும் அடிப்படையாக இருந்தது இவர்கள் உருவாக்கிய கப்பல்களே. அவை வைகிங் கப்பல்கள் எனப்படுகின்றன. பல அபூர்வ கப்பல்களை இவர்கள் கட்டமைத்திருக்கின்றனர். மரங்களை வைத்து கப்பல் கட்டும் நுட்பத்தை இவர்கள் கண்டுபிடித்ததாகவும் ஒருசாரார் கருதுகிறார்கள். இவர்கள் கப்பல் கட்டுவதில் வல்லவர்களாக இருந்துள்ளனர். 

கடுமையான குளிர்பிரதேசங்களில் வாழ்ந்ததால், இவர்கள் அந்தக் காலத் தேவைக்காகவே கொள்ளையடித்ததாகவும் வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள். இவர்களைப் பற்றிய ஏனைய கட்டுக்கதைகளையும் தாண்டி, இவர்கள் கலையில் வல்லவர்களாக இருந்துள்ளனர் என்றே இவர்கள் வாழ்ந்த பகுதியில் நடக்கும் தொல்பொருள் ஆராய்ச்சி மெய்ப்பிப்பதாகக் கூறப்படுகிறது.
 

புகைப்படம்.. நன்றி The Master Mind
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com