
சீனாவின் வடமேற்கே திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் கான்சு மாகாணம், ஜிஷிஷன் மாவட்டத்தில் உள்ளூா் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.9 முதல் 6.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த கின்காய் மாகாணமும் குலுங்கியது. ஜிஷிஷன் மாவட்டத்தின் தலாநகரான டாங்ஸியாங் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் உள்ள லியுகூ பகுதியில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
நிலநடுக்க மையம் கான்சு, கின்காய் ஆகிய இரு மாகாண எல்லைக்கோட்டுக்கு வெறும் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருந்ததால் இரு மாகாணங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. இதில், கான்சு மாகாணத்தில் 117 பேரும், கின்காயில் 31 பேரும் பலியாகினா். இரு மாகாணங்களிலும் கிட்டதட்ட ஆயிரம் போ் காயமடைந்தனா்.
மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லீ கியாங் ஆகியோா் உத்தரவிட்டனா்.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்தான் மிக மோசமானது என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.