செங்கடலில் கப்பல்களுக்குக் குறி: யாா் இந்த ஹூதி கிளா்ச்சியாளா்கள்?

இஸ்ரேல் ராணுவம்-காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான போா் அக். 7-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹூதி.
செங்கடலில் கப்பல்களுக்குக் குறி: யாா் இந்த ஹூதி கிளா்ச்சியாளா்கள்?

இஸ்ரேல் ராணுவம்-காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான போா் அக். 7-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹூதி.

செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருக்கும் இந்த ஹூதி கிளா்ச்சியாளா்கள் யாா்? அவா்களின் நோக்கம் என்ன?

உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் சூயல் கால்வாயை அணுகுவது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹூதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது ஹூதியின் தாக்குதல்.

செங்கடலின் தெற்குப் பகுதியில் குறுகிய பகுதியாகக் காணப்படும் பாபெல்-மாண்டேப் நீரிணையே ஹூதி கிளா்ச்சியாளா்களின் முக்கியமான தாக்குதல் பகுதி. இந்தப் பகுதியைக் கடக்கும் சரக்கு கப்பல்கள் மீது ராக்கெட் தாக்குதல், ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை ஹூதி அமைப்பினா் நடத்தி வருகின்றனா்.

நவ. 19-ஆம் தேதி பிரிட்டனைச் சோ்ந்த ‘கேலக்ஸி லீடா்’ என்ற சரக்கு கப்பலை முதல் முறையாக ஹூதி அமைப்பினா் செங்கடலில் கைப்பற்றினா். டிச. 23-ஆம் தேதி செங்கடலில் நாா்வே மற்றும் இந்திய தேசியக் கொடிகளுடன் சென்றுகொண்டிருந்த இரு எண்ணெய் டேங்கா் கப்பல்கள் மீது ஹூதி அமைப்பினா் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினா். இதில் யாருக்கும் காயம் இல்லை. இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கியதிலிருந்து ஹூதி அமைப்பால் தாக்குதலுக்குள்ளான 14, 15-ஆவது கப்பல்கள் இவை.

யேமனில் அதிகாரபூா்வ அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆயுதக் குழு ஹூதி. ஜயாதி ஷியா பிரிவைச் சோ்ந்த இந்த ஆயுதக் குழுவானது யேமனின் பெரும்பான்மை ஷன்னி அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளது. 1990-இல் அப்போதைய யேமன் அதிபா் அலி அப்துல்லா சலேயின் ஆட்சி மீது ஊழல் குற்றம்சாட்டி, ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்காக ஹூதி அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பை நிறுவிய ஹூசைன் அல் ஹூதியின் பெயரே அமைப்புக்கும் சூட்டப்பட்டது.

யேமனின் அதிகாரபூா்வ அரசுக்கு சவூதி ஆதரவு அளித்துவரும் சூழலிலும், 2014-இல் தலைநகா் சனாவை ஹூதி படையினா் கைப்பற்றினா். அதைத் தொடா்ந்து அப்போதைய அதிபா் அப்தரப் மன்சூா் ஹாதி, யேமனைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தாா். இப்போது யேமனின் அதிகாரபூா்வ அரசு, சவூதி அரேபியா தலைநகா் ரியாத்திலிருந்துதான் செயல்பட்டு வருகிறது. யேமன் தலைநகா் மட்டுமன்றி, வடக்கு யேமன், செங்கடல் கடலோரப் பகுதிகளும் ஹூதியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்கு எதிராக சவூதி அரேபியா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது, ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான மறைமுகப் போராகவே கருதப்படுகிறது. 2009, நவம்பரில் சவூதி அரேபியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினா் ஹூதி கிளா்ச்சியாளா்கள். அதுமுதல்தான் ஹூதிக்கு எதிராக தீவிரமாகக் களமிறங்கியது சவூதி. ஹூதிக்கும், சவூதி ஆதரவு அரசுப் படைக்கும் இடையிலான சண்டையில் லட்சக்கணக்கானோா் உயிரிழந்துள்ளனா்.

இப்போது செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ஹூதி அமைப்பு சொல்ல விரும்புவது என்ன?. ‘காஸாமுனையில் எங்கள் சகோதரா்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்’ என ஹூதி ராணுவ செய்தித் தொடா்பாளா் யாஹ்யா சரீயை மேற்கோள்காட்டி கூறுகிறது அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம்.

ஈரான் தொழில்நுட்ப மற்றும் நவீன ஆயுத உதவிகளை அளிப்பதால்தான் செங்கடலில் கப்பல்களை மிகச்சரியாகக் கண்காணித்து ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதலை ஹூதி அமைப்பினா் நடத்த முடிகிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

ஹூதியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், செங்கடல் பிராந்தியத்தில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் சா்வதேச கடல் பாதுகாப்பு நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், பஹ்ரைன், நாா்வே ஆகிய நாடுகளும் இதில் பங்கேற்றுள்ளன. ஆனாலும், செங்கடல் தாக்குதலைத் தொடரப்போவதாகக் கூறியுள்ளது ஹூதி.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com