2023-அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஈரானிய சிறைப் பறவை!

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19-ஆவது பெண் நர்கீஸ் முகமதி. 122 ஆணடுகால நோபல் வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப்படுவது இது 5-ஆவது முறையாகும். 
நா்கீஸ் முகமதி
நா்கீஸ் முகமதி

மனித குலத்துக்கு சேவை புரியும் மனம் கொண்டோருக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் விருதுகளில் தலையாயதான நோபல் பரிசு வழங்கப்படும்போதுதான் அது உலகம் முழுவதின் கவனத்தையும் ஈர்க்கிறது. அதேவேளை, உலகின் மிக உயரிய விருதினைப் பெறுவோர் சிறைக்குள் இருந்தால்...

சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளர், தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895-ல் எழுதிவைக்கப் பெற்ற உயிலின்படி நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 

யாருக்கெல்லாம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது..

சிறப்புமிக்க ஆய்வு மேற்கொண்டவர்கள், மனித சமூகத்திற்குப் பெரிதும் பயன்தரும் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்பாளர்கள், சமூகத்திற்குச் சிறப்பாகத் தொண்டாற்றியவர்கள், பொது அமைதிக்காகப் பாடுபடுபவர்கள் போன்றோருக்கு 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி மற்றும் பொருளாதாரம் எனும் ஆறு பிரிவுகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றன.

2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நம்முள் தனிக்கவனத்தை ஏற்படுத்தியவர்தான் நா்கீஸ் முகமதி. ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடிவருபவர் மனித உரிமை ஆா்வலா் நா்கீஸ் முகமதி (51). நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

யார் இந்த நர்கீஸ் முகமதி?

ஈரானின் ஜன்ஜானில் 1972 ஏப்ரல் 21இல் பிறந்தவர்தான் நர்கீஸ் முகமதி. இவர் இமாம் கொமேனி சர்வதேச பல்கலைக்கழகத்தில் பயின்று இயற்பியலில் பட்டம் பெற்றவர். 

இதையும் படிக்க | 2023-ன் சிறந்த படங்கள்!

1979ல் ஈரான் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஈரான் குடியரசாக வேண்டும் என்று புரட்சி வெடித்தபோது, நர்கீஸ் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். மன்னர் ஷா நாடு விட்டு ஓட புதிய ஆட்சி மலர்ந்தபோது, நர்கீஸ் குடும்பத்தினர் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, நர்கீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டார்கள். இந்த துயரச் செய்தியைத் தொலைக்காட்சி மூலமே நர்கீஸ் குடும்பத்தின் மற்ற உறவினர்கள் தெரிந்துகொண்டனர். நர்கீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு புரட்சிகளில் ஈடுபட்டு, தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். இதையெல்லாம் சிறு வயது முதலே கண்டு வளர்ந்த நர்கீஸ் பின்னாளில் ஒரு பெரிய புரட்சியாளராகவே மாறிவிட்டார்.

கல்லூரிப் பருவத்திலிருந்தே சமத்துவம், பெண்களின் உரிமைகளுக்காக வாதிட்டு தன்னை வேறுபடுத்திக்கொண்டவர். படிப்பை முடித்த அவர் பொறியாளராக தனது முதல் பணியைத் தொடர்ந்தார். சீர்திருத்தச் சிந்தனைகளைக் கொண்ட நர்கீஸ் பல்வேறு பத்திரிக்கைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

நர்கீஸ் கல்லூரில் படித்த சமயத்தில் சக புரட்சியாளரும், எழுத்தாளருமான தகி ரஹ்மானியை கடந்த 1999இல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது கணவர் தகியும் போராட்டங்களில் ஈடுபட்டு 14 ஆண்டுகள் சிறையில் கழித்தார். 

<strong>ஹிஜாப் போராட்டக்காரர்கள்</strong>
ஹிஜாப் போராட்டக்காரர்கள்

2003ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதியின் அமைப்பான டெஹ்ரானில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நர்கீஸ் பணியாற்றினார். அப்போது, போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நர்கீஸ் 2011இல் முதல்முறையாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்குச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்வலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவியதற்காக மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தார். 

2013இல் பிணையில் வெளியேவந்த அவர், மரண தண்டனையை எதிர்த்து தனது போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார். இதையடுத்து 2015இல் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சித்ரவதை, பாலியல் வன்கொடுமையை எதிர்த்துப் போராடினார். சிறையில் இருந்தபோதும் அமைதி, சமத்துவத்தை வலியுறுத்தி குரல் கொடுத்துவந்தார். 

தொடர்ந்து சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டதால், தகி ரஹ்மானி தனது இரண்டு குழந்தைகளுடன் பிரான்சுக்கு தப்பிச் சென்றார். நாட்டை விட்டு வெளியேற முடியாத முகமதி அடுத்தடுத்த ஆண்டுகளில் பலமுறை கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டார். 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அவரது மனித உரிமைச் செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். 

2020ஆம் ஆண்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான போராட்டங்களின்போது கொல்லப்பட்ட ஆர்வலர் இப்ராஹிம் கெடப்தாரின் நினைவிடத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் 2021இல் முகமதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தைக் கண்காணிக்க காஷ்ட்-இ-எர்ஷாத்(gasht-e Erashad) என்கின்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். 

<strong>கொல்லப்பட்ட மாஷா அமினி</strong>
கொல்லப்பட்ட மாஷா அமினி

ஈரானில் அரசு விதிமுறைகளுக்கேற்ப ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கடந்தாண்டு செப்.13-ம் தேதி மாஷா அமினி கைது செய்யப்பட்டார். அப்போது போலீஸ் காவலில் இருக்கும் மாஷா கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ஈரான் முழுவதும் பெரியளவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. 

இந்த போராட்டத்தின் மூலம் நர்கீஸின் பெயர் வெளிப்படையாக மக்களிடையே தெரிய ஆரம்பித்தது. அமினியின் கொலையைக் கண்டித்து சிறையில் இருந்தவாறே ஆதரவு திரட்டினார் நர்கீஸ். இதனால் சிறையில் அவருக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போதும் சிறையில் உள்ள அவர், ஈரானில் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் தெஹ்ரானின் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பெண்கள் உரிமைக்காகவும், மக்கள் ஆட்சிக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிய இவர் இதுவரை 13 முறை சிறையில் அடைக்கப்பட்டு, 5 முறை குற்றம் உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 134 கசையடியும் பெற்றுள்ளார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர் தனது ஒரு கண்ணின் பார்வையும் இழந்துள்ளார். 

பொறியாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், பெண்ணியவாதி என்று பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட அவர், லட்சியங்கள், போராட்டங்கள், எதிர்கொண்ட பல்வேறு சிரமங்களைத் தாண்டி நர்கீஸின் மன உறுதியைப் பாராட்டி நடப்பாண்டுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

2023ல் அமைதிக்கான நோபல் பரிசு

ஈரானில் பல ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தாலும், தற்போது வரை போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மனித குலுத்துக்காக அயராது பணியாற்றிவரும் நர்கீஸ் முகமதிக்கு உயரிய விருதான நோபல் பரிசு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது நோபல் குழு. 

இந்த நோபல் பரிசு நர்கீஸின் துணிச்சலான போராட்டத்துக்குக் கிடைத்துள்ள வெகுமதி என நோபல் குழு பாராட்டியுள்ளது. இதற்கு முன்னதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் கருத்துரிமைக்கான "சகரோவ்" பரிசை கடந்த 2018-இல் நர்கீஸ் பெற்றார். 

முன்னதாக, 2021ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் வழங்கப்படவில்லை. தொடர்ந்து ஜனவரி 2022இல் அவருக்கு எதிரான தண்டனையில் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது. அவருடன் சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும், மனவுறுதியின் தூணாகவும் விளங்கினார் நர்கீஸ். ஒரு கைதியாக அவரது விடாமுயற்சி மற்றும் அவரது தொடர்ச்சியான போராட்டங்கள் சிறையில் உள்ள பெண்களுக்கு உத்வேகத்தை அளித்தது. சிறையில் நடத்தப்படும் கல்விப் பட்டறைகள், நடன விருதுகளுக்கும் இவர் தலைமை தாங்கினார். அவரது நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியுள்ளது. 

2022இல் இதய நோயால் அவதிப்பட்டுவந்த நர்கீஸ் சிகிச்சைக்காக சிறையிலிருந்து வீடு திரும்பினார். அப்போது சிறையில் பெண் கைதிகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்த "வெள்ளை கொடுமைகள்" என்ற நூலையும் அவர் வெளியிட்டார். இதற்காக பேன் விருதுக்குத் தேர்வாக, அவரது கணவர் தகி ரஹ்மானி விருதைப் பெற்றுகொண்டார். 

<strong>விருதைப் பெற்ற மகள் கியானா, மகன் அலி ரஹ்மானி</strong>
விருதைப் பெற்ற மகள் கியானா, மகன் அலி ரஹ்மானி

2023இல் நார்வேயின் ஓஸ்லோ நகரில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை பாரீஸில் வசித்துவரும் அவரது மகன் அலி ரஹ்மானி மற்றும் மகள் கியானா ரஹ்மானி பெற்றுக் கொண்டனர். அமைதிக்கான நோபல் பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8 கோடி) பரிசுத் தொகையைக் கொண்டதாகும். 

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நர்கீசுக்கு தொலைபேசி அழைப்புகள் ஏற்கவும், பார்வையாளர்களை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஷா அமினி உயிரிழந்த முதல் நினைவு தினத்தில் நியூயார்க்ஸ் டைம்ஸில் முகமதி எழுதிய கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19-ஆவது பெண் நர்கீஸ் முகமதி ஆவார். நோபல் வெல்லும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 2-ஆவது பெண்ணாகும். 122 ஆண்டுகால நோபல் வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது இது 5-ஆவது முறை. 

முகமதியின் சிறைக் கருத்து..!

சிறையிலிருக்கும் நர்கீஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதற்காகக் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுவதை நான் ஒருபோதும் நிறுத்தமாட்டேன். அமைதிக்கான நோபல் பரிசு என்னை மேலும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பணியாற்ற வைக்கும். 

அரசு அதிருப்தியாளர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களின் குரலை உலகுக்குத் தெரிவிப்பதில் சர்வதேச ஊடகங்கள் ஆற்றிய பங்கை நா்கீஸ் பாராட்டினார்.

மேலும், ஈரானிய சமுதாயத்துக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை. இஸ்லாமியக் குடியரசு அரசின் அழிவுகரமான கொடுங்கோன்மைக்கு எதிரான கடும் போராட்டத்தில் செய்தியாளர்கள் மற்றும் ஊடக வல்லுநா்கள்தான் மிக முக்கியமான கூட்டாளிகள். ஈரானிய மக்களுக்காக உங்கள் அனைவரின் முயற்சிகளுக்கும் மனப்பூர்வமாக நன்றி கூறுவதாக நா்கீஸ் தனது குறிப்பில் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில், என் மகன், மகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தையில்லை.  குடும்பத்திலிருந்து நான் அந்நியமாகிக் கொண்டிருக்கிறேன். அன்பைக் கொடுத்து அன்பைப் பெறும் காலத்தில் நான் அதை இழந்து நிற்கிறேன். இழந்தது இனி திரும்ப வராது. மறுபக்கம் சுதந்திரம், சமநிலை, அமைதி இல்லாத உலகத்தில் வாழ்வது வீண். அரசாங்கத்தை எதிர்த்து வெற்றிபெறுவது அத்தனை சுலபம் அல்ல. ஆனால் நிச்சயம் வெற்றி பெறுவேன். எனது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார். 

மனித உரிமைகள், பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் உரிமைப் போராளி நர்கீஸ் எனும் பறவை.. சிறை எனும் கூண்டுக்குள் அடைபட்டிருக்கிறது.. பறவை அடைபட்டிருந்தாலும் அதன் போராட்டக் குணமும் உலகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிறைக் கம்பிகளால் தடுத்து நிறுத்திட இயலாது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com