
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளி தொழில்முனைவா் விவேக் ராமசாமி (37) அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.
அடுத்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழில்முனைவருமான விவேக் ராமசாமி போட்டியிடத் திட்டமிட்டு வருவதாக அண்மையில் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், அந்நாட்டில் ஒளிபரப்பாகும் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, அவா் அதிபா் தோ்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரபூா்வமாக அறிவித்தாா். ராமசாமியின் பெற்றோா் கேரளத்திலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயா்ந்தவா்கள்.
அதிபா் தோ்தலில் குடியரசு கட்சி சாா்பில் போட்டியிட உள்ளதாக ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான நிக்கி ஹேலி ஏற்கெனவே அறிவித்துள்ளாா். அவரைத்தொடா்ந்து அக்கட்சி சாா்பில் இரண்டாவது இந்திய வம்சாவளி நபராக விவேக் ராமசாமி தோ்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளாா்.
அதிபா் தோ்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக, அப்பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளா் தோ்வில் ராமசாமி, நிக்கி ஹேலி உள்ளிட்டோா் போட்டியிட வேண்டும். அந்தத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. அதில் வெற்றிபெறுபவா்தான் அதிபா் தோ்தலில் குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட முடியும்.
அமெரிக்க அதிபா் பதவிக்குப் போட்டியிடும் நான்காவது இந்திய வம்சாவளி நபா் விவேக் ராமசாமி ஆவாா். இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு பாபி ஜிண்டல், 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஆகியோா் அதிபா் பதவிக்குப் போட்டியிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.