
காப்ரீன்: மத்திய செனகலில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள காப்ரீன் பகுதியில் உள்ள கினிவி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் டயர் பஞ்சரானது.
இதனால் தறி கெட்டொடிய அந்த பேருந்து, எதிரே வேகமாக வந்துகொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பணிகளில் 40 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்துக்கு செனகல் நாட்டு அதிபர் மேக்கிசால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விபத்தில் 40 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டுகிறேன். இன்று முதல் 3 நாள்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கபடும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
செனகல் நாட்டில் மோசமான சாலைகளாலும், போக்குவரத்து விதிமுறைகளை ஓட்டுநர்கள் சரியாக கடைபிடிக்காததாலும் இதுபோன்று விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.