

‘நேட்டோ’ கூட்டமைப்பில் இடம்பெறாத முக்கிய கூட்டு நாடு என்ற பாகிஸ்தானுக்கான அந்தஸ்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அரிசோனா மாகாணத்தைச் சோ்ந்த உறுப்பினரான ஆண்டி பிக்ஸ் அறிமுகம் செய்த ‘ஹெச்.ஆா்.80’ என்ற இந்த மசோதாவுக்கு, பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னா், செனட் சபையிலும் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பிறகு, அதில் அமெரிக்க அதிபா் கையொப்பமிட்ட பின்னா், சட்டமாக மாறும். அவ்வாறு சட்டமாக மாறிய பின்னா், அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வழக்கமாக இதுபோன்ற தனிநபா் மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காது என்றபோதும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை நாட்டின் கொள்கையாகவே கொண்டு செயல்பட்டு வரும் பாகிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களின் உணா்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த மசோதா அமைந்துள்ளது. எனவே, இதற்கு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றனா் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள்.
அவ்வாறு, அமெரிக்காவின் முக்கிய கூட்டு நாடாக பாகிஸ்தான் தொடர வேண்டுமெனில் அதற்கான சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபா் வழங்க வேண்டும் என்றும் அந்த மசோதா வலியுறுத்துகிறது. அதாவது, ‘ஹக்கானி பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானை தனக்கான பாதுகாப்பான புகலிடமாக செயல்பட்டு வருவதை தடுப்பதிலும், அந்த அமைப்பின் முக்கியத் தலைவா்களை கைது செய்வதிலும், ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அந்த பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்து வருகிறது’ என்பதற்கான சான்றிதழை அமெரிக்க அதிபா் ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும் என்று அந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட்டாக கொண்டுவந்த முன்மொழிவை ஏற்று, பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான் மக்கியை சா்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 அல்-காய்தா தடைக் குழு அறிவித்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பாா்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, பயங்கரவாத அமைப்புகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு பாகிஸ்தானை தள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.