அமெரிக்காவில் சிறையில் நடந்த பட்டமளிப்பு விழா

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கைதிகள் தங்களது பட்டப்படிப்பை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் படித்துமுடித்துள்ளனர்.
அமெரிக்காவில் சிறையில் நடந்த பட்டமளிப்பு விழா

அமெரிக்காவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கைதிகள் தங்களது பட்டப்படிப்பை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் படித்துமுடித்துள்ளனர்.

தி ஃபெடரல் பெல் கிராண்ட் திட்டம் அமெரிக்க சிறைக் கைதிகளின் கல்விக்காக உதவி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் படித்து பட்டம் பெற்ற 85க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பட்டமளிப்பு விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கைதிகள் அனைவரும் கருப்பு நிற கவுனை அணிந்து கொண்டு, ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு வருகிறார்கள். அவர்கள் உள்ளே நுழையும் போது அவர்களது குடும்பத்தினர் கைதட்டி, ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள். இது வழக்கமாக நடைபெறும் பட்டமளிப்பு நிகழ்வு அல்ல. காரணம். சிறையில், பட்டம் பெற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் பட்டமளிப்பு நிகழ்வு.

அமெரிக்காவில் சிறையிலுள்ள கைதிகளில் பலர் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். பட்டப்படிப்பை முடித்த சிறைக் கைதிகளுக்கு கலிபோர்னியாவில் உள்ள போல்ஸம் சிறையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில், அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகள் பட்டம் பெற்றனர். தொழிற்கல்வி பட்டங்கள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் என 85க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பட்டம்பெறும்போது, கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

அமெரிக்காவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஃபெடரல் பெல் கிராண்ட்  திட்டத்தின் மூலமாக சிறைக் கைதிகளுக்கு இலவச கல்வி கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கு 13 கோடி செலவில்  30,000 சிறைக் கைதிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில், வரும் மாதத்திலிருந்து இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்,  சிறையில் பட்டப்படிப்பை முடித்தவர்கள், அதற்காகும் கட்டணத் தொகையை திருப்பி செலுத்தவேண்டிய அவசியமில்லை என்பதுதான். 

1970 முதல் 2000 வரையிலான காலகட்டங்களில் கைதிகளுக்கான தண்டனைகள் கடுமையாக இருந்தன. சிறையில் இன வேறுபாடுகளும் இருந்தது. இந்த நிலையில்தான், 2016ஆம் ஆண்டு கைதிகள் வாழ்வை ஒளிரச்செய்ய ஃபெடரெல் பெல் கிராண்ட் திட்டம் கொண்டுவரப்பட்டது. சிறைகளுக்குள் கைதிகளுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டு அவர்களின் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. முதலில் போல்சம் மாநில சிறையில் உள்ள கைதிகளுக்கு கல்லூரி பட்டம் வழங்கப்பட்டது.

சாக்ரமெண்டோவிலுள்ள கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சிறைக்கைதிகளில் ஒருவரான ஜெரால்டு மெஸ்ஸி குடிபோதையில் வாகனம் ஓட்டி, நண்பர் பலியான வழக்கில், 15ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர். அவர் தான் பட்டம்பெற்றது குறித்துக் கூறுகையில், சிறையில் கல்லூரி படிப்பை முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்டேன். இன்று பட்டம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். 

ஃபெடரெல் பெல் கிராண்ட் திட்டத்தின் இடைக்கால இயக்குனர் டேவிட் ஜுக்கர்மன் கூறுகையில், ஒரு கைதியை சிறையிலடைத்து, அவரை பராமரிக்க ஒரு லட்சம் வரை செலவாகும்.

அதே நேரம் கைதி ஒருவர் இளங்கலை பட்டம் முடிப்பதற்கு 20,000 தான் செலவாகும்.  பட்டம் பெற்று விடுதலை செய்யப்படும் கைதிகள் மீண்டும் தவறுகள் செய்யாமல், மனம் திருந்தி நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையைப் பெற்று அரசுக்கு வரி செலுத்தி வந்தால் சிறைக்கல்வியின் அவசியம் புரியும், அதன் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வரி செலுத்துபவர்களின் பணத்தை, இவ்வாறு குற்றவாளிகளின் கல்விக்காக செலவிடுவதா என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் பலவாறு விமரிசித்த நிலையிலும், 2015ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் கீழ், குறிப்பிட்ட எண்ணிக்கையில், சிறைக் கைதிகளுக்கு பட்டப்படிப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 

தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம், இந்த திட்டத்துக்கு முழு ஆதரவை அளித்து, விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com