வெடித்துச் சிதறியது டைட்டன்: எச்சரித்தவரை ஓரங்கட்டியதா நிறுவனம்?

டைட்டன் கப்பல், உள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வெடித்துச் சிதறியது டைட்டன்: எச்சரித்தவரை ஓரங்கட்டியதா நிறுவனம்?

பாஸ்டன்: டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக எச்சரித்தவரை ஓஷன்கேட் நிறுவனம், பணியிலிருந்து நீக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் எச்சரித்தபடி, டைட்டன் கப்பல், உள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆழ்கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, அதிலிருந்த பாகிஸ்தானிய தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியானது.

இது குறித்து, டைட்டன் நீர்மூழ்கியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடலோர காவல் படைப் பிரிவு தளபதி ஜான் மாகர் கூறியதாவது:

டைட்டன் நீர்மூழ்கி மாயமான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின்போது, அந்த நீர்மூழ்கியின் சிதறிய பாகங்கள்  ரிமோட் நீர்மூழ்கி சாதனம் (ஆர்ஓவி) மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1,600 அடி தொலைவில் அந்த நீர்மூழ்கியின் பாகங்கள் கடல் படுகையில் சிதறிக் கிடக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பும் பாதகாப்பு அமைப்புகளும் முறையாக இல்லை என ஏற்கனவே ஓஷன்கேட் நிறுவனத்துக்கு விரிவான ஆய்வறிக்கையை, அதன் ஊழியர் ஒருவர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு தாக்கல் செய்திருந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆழமான கடலுக்குள் செல்லும்போது, நீரின் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளும் சக்திஅற்றதாக டைட்டன் விளங்குவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், அவரை பணியிலிருந்தே நீக்கியதோடு, நிறுவனத்தின் மிகவும் ரகசியமான தகவல்களை பிறருடன் பகிர்ந்துகொண்டதாக அவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தது ஓஷன் கேட் நிறுவனம் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடலுக்குள் அழுத்தத்தைத் தாங்குவதற்கான டைட்டன் நீர்மூழ்கியின் பகுதி, உள்வெடிப்புக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

அவர்களது உடல்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், டைட்டன் நீர்மூழ்கி எவ்வாறு வெடித்தது என்பதை அறிந்துகொள்வதற்காக அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடரும் என்றார் அவர்.

பிரிட்டனிலிருந்து அமெரிக்கா நோக்கி கடந்த 1912-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், வழியில் பனிப்பாறை மோதி கடலுக்குள் மூழ்கியதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலடியில் உடைந்து கிடந்தது கடந்த 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

அதன் பிறகு, அந்தக் கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்படத் துறையினர் போன்றவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்வையிட்டு வந்தனர்.

இந்த நிலையில், டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நீர்மூழ்கி ஒன்றை வடிமைத்தது.

'டைட்டன் நீர்மூழ்கி' என்று பெயரிடப்பட்ட அதில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணிக்க முடியும். எனினும், அந்த நீர்மூழ்கியின் பாதுகாப்புத் தன்மை போதிய அளவுக்கு சோதிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், எம்வி போலார் பிரின்ஸ் என்ற கப்பல் மூலம் டைட்டானிக் கப்பல் விழுந்துள்ள கடல் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி, வியாழக்கிழமை காலை கடலுக்குள் இறக்கப்பட்டது.

அதில் பிரிட்டன் தொழிலதிபர் ஹமீஷ் ஹார்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், நீர்மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபர் ஷேஸôதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேர் இருந்தனர்.

சுமார் 4 கி.மீ. ஆழத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த நீர்மூழ்கிக்கும் போலார் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு சுமார் 1 மணி நேரம் 45 நிமிஷத்துக்குப் பிறகு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், 4 நாள்களாக நடைபெற்ற தேடுதல் பணிகளுக்குப் பிறகு அந்த நீர்மூழ்கி கடலுக்குள் வெடித்துச் சிதறி, அதிலிருந்த 5 பேரும் உயிரிழந்தது தற்போது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com