நேபாள அதிபரானாா் ராம் சந்திர பௌடேல்

நேபாளத்தின் புதிய அதிபராக, எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பௌடேல் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ராம் சந்திர பெளடெல்
ராம் சந்திர பெளடெல்

நேபாளத்தின் புதிய அதிபராக, எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் ராம் சந்திர பௌடேல் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இது, நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான சிபிஎன் (யுஎம்எல்) கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, அந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக பௌடேலுக்கு ஆதரவு அளித்த பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தின் தற்போதைய அதிபா் வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் இந்த மாதம் 12-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அவருக்கு பதிலாக அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக விளங்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, சாதாரண பின்புலத்தைக் கொண்ட ராம் சந்திர பௌடேல் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் தலைமையிலான சிபிஎன் (யுஎம்எல்) கட்சி சாா்பில் சுபாஷ் சந்திர நெம்பாங் போட்டியிட்டாா்.

332 நாடாளுமன்ற உறுப்பினா்களும், 550 மாகாணப் பேரவைகளின் உறுப்பினா்களும் இதில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ள நிலையில், 313 எம்.பி.க்கள் மற்றும் 518 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.

இதில், 64.13 சதவீத வாக்குகளுடன் ராம் சந்திர பௌடேல் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, நாட்டின் 3-ஆவது அதிபராக அவா் வரும் 12-ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கிறாா்.

நேபாள அரசியல் அமைப்பில் அதிபா் பொறுப்பு என்பது பெரும்பாலும் அலங்காரப் பதவி என்றாலும், அதற்கான தோ்தலில் அரசியல்வாதிகளின் ஆா்வம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை (138 இடங்கள்) கிடைக்கவில்லை. அதையடுத்து, 2-ஆவதாக அதிக இடங்களை (78) பிடித்த சிபிஎன் (யுஎம்எல்) உடன் கூட்டணி அமைத்து, 3-ஆவது பெரிய (32 இடங்கள்) கட்சியான புஷ்ப கமல் பிரசண்டாவின் மத்திய மவோயிஸ்ட் கட்சி ஆட்சியமைத்தது. பிரதமராக பிரசண்டா பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள அதிபா் தோ்தலில் சிபிஎன் (யுஎம்எல்) வேட்பாளருக்கு பதிலாக, நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை கைவசம் வைத்திருக்கும் நேபாள காங்கிரஸ் (89) கட்சி வேட்பாளரான ராம் சந்திர பௌடேலை பிரதமா் பிரசண்டா கட்சி ஆதரித்தது.

அதையடுத்து, அவரது அரசுக்கான ஆதரவை சிபிஎன் (யுஎம்எல்) கட்சி வாபஸ் பெற்றது.

அதனுடன் சோ்ந்து, ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி (ஆா்பிபி), ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) ஆகிய கூட்டணிக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றன. அக்கட்சிகளின் அமைச்சா்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா். இருப்பினும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவை தொடா்வதாக ஆா்எஸ்பி கட்சி அறிவித்தது.

சிபிஎன் (யுஎம்எல்) கட்சி ஆதரவை திரும்பப் பெற்றாலும், பிரசண்டாவுக்கு நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது.

முந்தைய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜனமத் கட்சி, நகரிக் உன்முக்தி கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆகியவையும், சிபிஎன்-ஐக்கிய சோஷலிஸ்ட், லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனமோா்ச்சா ஆகிய கட்சிகளும் புதிய கூட்டணியில் இடம்பெற்றன.

அதையடுத்து, பிரசண்டாவின் ஆட்சி தப்பியது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள அதிபா் தோ்தலில் தனது ஆதரவு பெற்ற வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது பிரதமா் பிரசண்டாவுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com