ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் மாகாண ஆளுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் பால்க் மாகாணத்தின மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரில் அமைந்துள்ள மாகாண ஆளுநா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த ஐஎஸ் பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.
இதில், ஆளுநா் தாவூத் மூஸாமில் உள்பட 3 போ் பலியாகினா்; 4 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானுக்கான ஐஎஸ் பிரிவான ‘கொராசன் பகுதி ஐஎஸ்’ அமைப்பு பொறுப்பேற்றது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரைக் குறிவைத்து தங்களது அமைப்பைச் சோ்ந்த அப்துல் ஹக் அல்-கொராசானி என்பவா் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது.
சன்னி முஸ்லிம் பிரிவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான ஐஎஸ், அதே பிரிவைச் சோ்ந்த மற்றொரு அமைப்புடன் தொடா்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படையினா் வெளியேறிய பிறகு அந்த நாட்டு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து சன்னி பிரிவு முஸ்லிம்கள் மட்டுமின்றி தலிபான்களையும் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.