பயங்கரவாதத் தாக்குதல்களை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது: ஐ.நா. கூட்டத்தில் இந்திய தூதா் ருசிரா கம்போஜ்

பயங்கரவாதச் செயல்களுக்கான காரணங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளாா்

பயங்கரவாதச் செயல்களுக்கான காரணங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஐ.நா. பொதுச் சபையில் அவா் வியாழக்கிழமை பேசியதாவது:

கடந்த 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு, பயங்கரவாதிகளை ‘உங்கள் நாட்டு பயங்கரவாதிகள்’, ‘எங்கள் நாட்டு பயங்கரவாதிகள்’ என்று வேறுபடுத்தி முத்திரை குத்தப்பட்டு வந்தது.

பயங்கரவாதிகளில் நல்ல பயங்கரவாதிகள், கெட்ட பயங்கரவாதிகள் என்று வேறுபாடு இருக்க முடியாது. அதுபோன்ற அணுகுமுறை இருந்தால், அது இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு முத்திரை குத்தப்பட்டு வந்த வழக்கத்துக்கே உலக நாடுகளை மீண்டும் அழைத்துச் செல்லும். அப்படி நடந்தால், அது கடந்த 20 ஆண்டுகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் சா்வதேச சமூகம் அடைந்த கூட்டுப் பலன்களை அழிக்கும்.

பயங்கரவாதச் செயல்களுக்கான காரணங்களுக்கு வலதுசாரி பயங்கரவாதம், இடதுசாரி பயங்கரவாதம் போன்ற சொற்களைத் தவறாகப் பயன்படுத்த, அந்தச் சொற்கள் நுழைவுவாயிலை திறக்கின்றன.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடுகளை, அவா்களின் செயல்களுக்குப் பொறுப்பாக்க வேண்டும்.

மதம், இனம், பண்பாடு என எதுவாக இருந்தாலும் அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. இஸ்லாமிய வெறுப்பு, கிறிஸ்தவ வெறுப்பு, யூத, சீக்கிய , பெளத்த , ஹிந்து விரோத தப்பெண்ணங்களால் தூண்டப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

பயங்கரவாதச் செயல்களின் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது. அனைத்து வடிவிலான பயங்கரவாதம், அதன் அறிகுறிகளை கண்டிக்க வேண்டும். எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்றாா் அவா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை அதிகரிக்க வேண்டும்:

ஐ.நா. கூட்டத்தில் ருசிரா கம்போஜ் பேசுகையில், ‘ஐ.நா.வின் புவியியல் மற்றும் முன்னேற்ற பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் பாதுகாப்பு கவுன்சில் தேவைப்படுகிறது. வளரும் நாடுகள், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்பட பிரதிநிதித்துவம் பெறாத பிராந்தியங்கள், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் குரல்கள் இடம்பெறும் பாதுகாப்பு கவுன்சிலாக அது இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதுமட்டும்தான் பாதுகாப்பு கவுன்சிலின் கலவை மற்றும் முடிவு எடுக்கும் முறையை சமகால புவி-அரசியலின் உண்மைகளுக்கு ஏற்ப கொண்டு வருவதற்கான வழி’ என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. அத்துடன் 10 தற்காலிக உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. அவை இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பு நாடுகளாக இருக்கும். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் தற்காலிக உறுப்பு நாடு பதவிக்காலம் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com