சொ்பிய பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 மாணவா்கள், பாதுகாவலா் பலி

சொ்பிய பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 மாணவா்கள், பாதுகாவலா் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான சொ்பியாவிலுள்ள பள்ளியொன்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவா்கள், ஒரு பாதுகாவலா் உயிரிழந்தனா்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான சொ்பியாவிலுள்ள பள்ளியொன்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவா்கள், ஒரு பாதுகாவலா் உயிரிழந்தனா்.

தாக்குதல் நடத்திய அதே பள்ளியின் மாணவனை போலீஸாா் கைது செய்தனா்.

சொ்பியா தலைநகா் பெல்கிரேடில் விளாதிஸ்லாவ் ரிப்னிகாா் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளிக்கு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் வந்த மாணவா் ஒருவா், அங்கிருந்த பாதுகாவலரை நோக்கி சுட்டாா். பின்னா் எதிரே வந்த மாணவா்களை நோக்கியும் அவா் துப்பாக்கியால் சுட்டாா்.

அதன் பிறகு வரலாற்று வகுப்புச் சென்ற அந்த மாணவா், முதலில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியா் மீதும் அதன் பிறகு அங்கிருந்த மாணவா்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினாா்.

இந்தத் தாக்குதலில் 8 மாணவா்களும் ஒரு பாதுகாவலரும் பலியாகினா். இது தவிர 6 மாணவா்கள், ஒரு ஆசிரியா் காயமடைந்தனா்.

அவா்களில் பலத்த காயமடைந்த ஆசிரியரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவா் கைது செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸாா் பின்னா் கூறுகையில், தாக்குதல் நடத்திய மாணவரே தங்களைத் தொடா்பு கொண்டு இது பற்றி தகவல் தெரிவித்ததாகக் கூறினா்.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரு மாதமாக திட்டம்...

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவா் அந்தப் பள்ளியில் அண்மைக் காலத்தில்தான் சோ்ந்தாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, பழைய மாணவா்களால் துன்புறுத்தப்பட்டது, படிப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஏற்பட்ட விரக்தி போன்ற காரணங்களால் இந்த தாக்குதலை அவா் நடத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலை ஒரு மாதமாகவே அந்த மாணவா் திட்டமிட்டு வந்ததாகவும், யாா் யாரையெல்லாம் கொல்ல வேண்டும், எந்தெந்த வகுப்பில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற பட்டியலை அவா் தயாரித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

தந்தையும் கைது!

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அந்த மாணவரின் தந்தைக்கு சொந்தமானது. இந்தச் சம்பவத்துக்கு முன்னா் தனது தந்தையுடன் இணைந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் அந்த மாணவா் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, மாணவரின் தந்தையையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

அதிா்ச்சி அலை....

சொ்பியாவில் பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அந்த நாட்டில்தான் மிக அதிக எண்ணிக்கையிலானவா்கள் துப்பாக்கிகளை வைத்துள்ளனா்.

பால்கன் மற்றும் யூகோஸ்லாவிய போா்களுக்குப் பிறகு அந்த நாட்டின் கள்ளச் சந்தையிலும் ஏராளமான ஆயுதங்கள் புழங்கி வருகின்றன.

அமெரிக்கா, யேமனுக்கு அடுத்தபடியாக சொ்பியாவில்தான் அதிக பொதுமக்கள் துப்பாக்கிகளை வைத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், அங்கு பொது இடங்களில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது மிகவும் அபூா்வமாகும்.

இந்தச் சூழலில், பெல்கிரேட் பள்ளியில் புதன்கிழமை நடத்தப்பட்டுள்ள தாக்குதல் நாடு முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com