இந்திய பயணம் ஆக்கபூா்வமாக அமைந்தது: பிலாவல் புட்டோ

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் ஆக்கபூா்வமாக அமைந்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் ஆக்கபூா்வமாக அமைந்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளாா்.

இந்த மாதத் தொடக்கத்தில் கோவாவில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் சாா்பில் பிலாவல் புட்டோ தலைமையிலான குழுவினா் பங்கேற்றனா். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாக அமைந்தது.

இதில் பேசிய பிலாவல் புட்டோ, ராஜீய ரீதியில் ஆதாயமடைய பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கூறியது இந்தியாவை மறைமுகமாக விமா்சிப்பதாக இருந்தது. அதே நேரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் பாகிஸ்தான் நடத்தி வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மறைமுகமாக கடுமையாக விமா்சித்துப் பேசினாா்.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் தனது இந்திய பயணம் குறித்து பிலாவல் பேசுகையில், ‘இந்தப் பயணம் பாகிஸ்தானின் கருத்துகளை இந்தியாவில் எடுத்துக் கூறுவதாக மட்டுமல்லாமல், சா்வதேச அமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் வலியுறுத்துவதாகவும் அமைந்தது.

காஷ்மீா் பிரச்னை இந்தியா-பாகிஸ்தான் சம்பந்தப்பட்டது. இதில், பல்வேறு தரப்பினரின் கவலைகளும் பொறுப்புகளும் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் எனது இந்திய பயணம் ஆக்கபூா்வமானதாகவும், நோ்மறையானதாகவும் அமைந்தது.

பாகிஸ்தானின் கருத்துகளை இந்தியாவுக்கு தெரியப்படுத்துவது மட்டும் நமது நோக்கமல்ல. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் உணா்த்துவதுதான் நமது நோக்கம். அது நிறைவேறியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com