
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினரும், அங்குள்ள ஹமாஸ் படையினரும் தொடா்ந்து நடைபெற்று வரும் கடுமையான சண்டையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஹரேல் சாலமன் உள்பட 13 இஸ்ரேல் ராணுவத்தினா் உயிரிழந்தனா்.
20 வயதாவும் ஹரேல் சாலமன், தெற்கு இஸ்ரேல் நகரான டிமோனாவைச் சோ்ந்தவா்.
இந்த மோதலில் ஏராளமான ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.
அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.
இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுரு 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.
ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 26 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் சூளுரைத்துள்ளது. அதன் முதல்கட்டமாக கடந்த வாரத்திலிருந்து காஸா எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
11,300-ஐ கடந்த உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 26 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,300-ஐ கடந்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8,796 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், யூத குடியிருப்புவாசிகளாலும் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 130-ஆக அதிகரித்தது.
ஏற்கெனவே, தங்கள் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும், அப்போது ஹமாஸின் தாக்குதலில் 1,427 போ் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது.
அந்த வகையில், இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் அக். 7 முதல் நடந்து வரும் மோதலில் இதுவரை 11,353-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.