இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உறவினர்களை சந்தித்த போப் பிரான்சிஸ்

காஸாவில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களை போப் பிரான்சிஸ் இன்று தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உறவினர்களை சந்தித்த போப் பிரான்சிஸ்

வாடிகன்: காஸாவில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களை போப் பிரான்சிஸ் இன்று தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது போப் பிரான்சிஸ் பேசுகையில், அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற பயங்கரவாத எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு புதன்கிழமை அறிவித்திருக்கும் நிலையில், இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டிருந்த நிலையில், இருதரப்பு உறவினர்கள் மத்தியிலும் போப் பிரான்சிஸ் பேசினார். அப்போது, இந்த போர் நிறுத்தம் குறித்து போப் பிரான்சிஸ் எதையும் குறிப்பிட்டுப் பேசவில்லை.

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள்.

அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினா் காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.

காஸாவில் பிணைக் கைதிகளாக இருக்கும் 200 பேரில் சிலரின் உறவினர்களை சந்தித்ததாகவும், இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களின் உறவினர்களையும் பாலஸ்தீன தூதருடன் சந்தித்ததாகவும் போப் குறிப்பிட்டார்.

பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாலஸ்தீன தேசிய கொடிகளை ஏந்தியும், மனிதப் படுகொலையை எடுத்துரைக்கும் காஸா போர்க் காட்சிகள் கொண்ட பதாகைகளையும் பலரும் ஏந்தியிருந்தனர்.

போரை தாண்டி நாம் சென்றுவிட்டோம். இனி எப்போதும் இது போராக இருக்க முடியாது. இது பயங்கரவாதம் என்று போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார். அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com