அரசியல்வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும்: துவாரகா பிரபாகரன்

அரசியல்வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகா குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் மகள் துவாரகா?
பிரபாகரன் மகள் துவாரகா?
Published on
Updated on
1 min read

அரசியல்வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகா குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் நவ. 27 ஆம் நாளை விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மாவீரர் நாள் என இலங்கைத் தமிழர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இலங்கைத் தமிழர் போராட்ட காலத்தில் மாவீரர் நாள்களில் பிரபாகரன் ஆற்றிய உரைகள் குறிப்பிடத் தக்கவை.

இந்த ஆண்டு மாவீரர் நாளில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா, தமிழ் ஒளி என்ற யூ டியூப் சேனலில் காணொலி வாயிலாக மாவீரர் நாளையொட்டிக் கொள்கைப் பிரகடன உரையாற்றுவார் என சமூக ஊடகங்களின்வழி தகவல்கள் பரவின.

அறிவித்தபடி, குறிப்பிட்ட நேரத்தில் யூ டியூப் ஒளிபரப்பில் பிரபாகரன் மகள் துவாரகா எனக் குறிப்பிடப்பட்ட பெண்மணி உரையாற்றினார். சுமார் 10 நிமிஷங்கள் நீடித்த இந்த உரையில், புலிகளும் மக்களும் வேறு வேறு அல்லர் என்று குறிப்பிட்டார் துவாரகா பிரபாகரன்.

"இலங்கைப் படையினர் தோல்வியுறும் தருணங்களில் எல்லாம் பிற நாடுகளின், சக்தி வாய்ந்த நாடுகள் தலையிட்டு இலங்கைக்கு உதவின. இதன் தொடர்ச்சியாக, புலிகள் இயக்கத்திற்கு நாடுகள் தடை விதித்தன.

"சுதந்திரத்துக்கான போராட்டம் முற்றுப் பெறவில்லை. புறநிலைச் சூழல்கள் அனைத்தும் அப்படியேதான் இருக்கின்றன. பண்பாட்டுச் சீரழிவுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. சகலமும் சிங்களமயமாக்கப்படுகின்றன.

"அனைத்து சுதந்திரங்களும் பறிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எம் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள்.

"எமது பிரச்னையில் தலையிட்ட சக்திவாய்ந்த நாடுகள் அரசியல் தீர்வை வழங்கவில்லை. ஐ.நா. போன்ற அமைப்புகளும் நீதியைப் பெற்றுத் தரவில்லை.

"ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு இதுவே காரணங்கள். சுதந்திரத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

"நாம் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார் துவாரகா பிரபாகரன்.

மேலும், தாய்த் தமிழக உறவுகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், அனைவரும் உறுதுணையாக நின்று குரல் கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஒளிபரப்பின் தொடக்கத்தில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், போரின்போது உடைப்பை ஏற்படுத்தி பிரபாகரனும் துவாரகாவும் வெளியேறியதாகக் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழர் தேசிய கூட்டமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, அவருடைய மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் மாவீரர் நாளையொட்டி துவாரகா பிரபாகரன்  உரையாற்றியுள்ளார். ஆனால், இந்த காணொலியில் தோன்றி உரையாற்றியவர் உண்மையிலேயே பிரபாகரன் மகள்தானா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com