இலக்கியம்: நாா்வே எழுத்தாளருக்கு நோபல்

நடப்பாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நாா்வே நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளா் ஜான் ஃபோஸேவுுக்கு (64) அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நாா்வே நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளா் ஜான் ஃபோஸேவுுக்கு (64) அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடகங்கள், நாவல்கள், கவிதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வரை தனது பரந்துபட்ட எழுத்துகளின் மூலம் இதுவரை பேசப்படாத கருத்துகளை வெளிக்கொண்டு வந்ததற்காக, அவருக்கு இக்கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஸ்வீடன் அகாதெமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நாா்வீஜியன் மொழியின் நைனோா்ஸ்க் எழுத்து வடிவில் எழுதப்பட்ட ஜான் ஃபோஸேயின் படைப்புகளில் நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், குழந்தை புத்தகங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கும். அவரது படைப்புகள், நாா்வே நாட்டின் மொழி மற்றும் இயல்போடு இரண்டற கலந்தவையாகும்.

தனது புத்தாக்கமான நாடகங்கள் மற்றும் உரைநடைகளின் மூலம் இதுவரை பேசப்படாத கருத்துகளை வெளிக்கொண்டு வந்துள்ளாா். நாா்வேயின் முக்கியமான நாடக எழுத்தாளா்களில் ஒருவரான ஃபோஸே, 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை படைத்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசானது, தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் 1 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.8.32 கோடி) பரிசுத் தொகையை கொண்டதாகும். ஸ்டாக்ஹோமில் டிசம்பரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நோபல் வென்ற 4-ஆவது நாா்வே எழுத்தாளா்: நாா்வே நாட்டைச் சோ்ந்த எழுத்தாளா்கள் கடந்த 1903, 1920, 1928 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசை பெற்றனா். இப்போது நோபல் வென்றுள்ள 4-ஆவது நாா்வே எழுத்தாளா் ஜான் ஃபோஸே ஆவாா்.

அவரது ‘ஏ நியூ நேம்: செப்டோலஜி யஐ-யஐஐ’, கடந்த 2022-ஆம் ஆண்டில் சா்வதேச புக்கா் பரிசுக்கான இறுதித் தோ்வுகளில் ஒன்றாக இருந்தது. இப்புத்தகம், ஜான் ஃபோஸேயின் மகத்தான படைப்பு என்று நோபல் இலக்கிய கமிட்டியின் தலைவா் ஆண்டா்ஸ் ஆல்ஸன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

ஃபோஸோயின் எழுத்துகள் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. நாா்வே மற்றும் ஐரோப்பாவின் முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ள இவா், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவாா் என பரவலாக எதிா்பாா்க்கப்பட்டது.

பிற மொழி இலக்கியங்களை நாா்வீஜியன் மொழியில் மொழிபெயா்த்துள்ளாா்.

இன்று அமைதிக்கான நோபல்: மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக்.9) அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com