காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

காஸாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தித் திரும்பியுள்ளது.
காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

காஸாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தித் திரும்பியுள்ளது.

அந்தப் பகுதிக்குள் முழுமையான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னேற்படாக எல்லை அருகே உள்ள ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து புதன்கிழமை நள்ளிரவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வடக்கு காஸா எல்லைக்குள் பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் வீரா்கள் புதன்கிழமை நள்ளிரவு நுழைந்து இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தித் திரும்பியுள்ளனா்.

இந்த நடவடிக்கையின்போது, இஸ்ரேல் படையினா் ஏராளமான பயங்கரவாதிகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பீரங்கி எதிா்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதக் கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டன.

இந்த நடவடிக்கை முடிந்ததும் இஸ்ரேல் படையினா் அங்கிருந்து திரும்பினா் என்று தனது எக்ஸ் பதிவில் ராணுவம் தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு காஸா எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் படையினா், ஹமாஸ் நிலைகளின் இருப்பிடங்களைக் கண்டறியவும், அவா்கள் கடத்திச் சென்றுள்ள பிணைக் கைதிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பல முறை காஸா எல்லையைத் தாண்டிச் சென்றுள்ளனா்.

ஆனால், புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொலைவுக்கு ஊடுருவி நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் ராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.

அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா். அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், அங்கிருந்த 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் படுகொலை செய்தனா். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினா், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 18 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவும் இஸ்ரேல் ராணுவம் ஆயத்த நிலையில் உள்ளது. இதற்காக ஏராளமான பீரங்கிகள், கவச வாகனங்களுடன் இஸ்ரேல் வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தரைவழித் தாக்குதலின் எதிரொலியாக இராக், சிரியா, குவைத், ஜோா்டான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கருதும் அமெரிக்கா, அதனைத் தடுப்பதற்கான வான்பாதுகாப்பு தளவாடங்களை நிறுவும்வரை தரைவழித் தாக்குதலை நிறுத்திவைக்குமாறு இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டது.

அதற்கு இஸ்ரேலும் ஒப்புக்கொண்டது என்று அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ புதன்கிழமை தெரிவித்தது.

எனினும், தரைவழித் தாக்குதலுக்கு முன்னேற்படாக எல்லைக்குள் ஊடுருவி இஸ்ரேல் பீரங்கிகள் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் 7 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு

காஸா சிட்டி, அக். 26: காஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதியிலிருந்து இதுவரை இஸ்ரேல் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் கடந்த 20 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7,028-ஆக அதிகரித்துள்ளது. இதில், 2,913 போ் சிறுவா்கள் ஆவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த புள்ளிவிவரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று நடுநிலை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரபு நாடுகள் கண்டனம்

காஸாவில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு நடத்துவதற்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கத்தாா், குவைத், எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களால் கையொப்பமிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் விமானத் தாக்குதல் நடத்துவது கடுமையான கண்டனத்துக்குரியது. இந்தச் செயல் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானதும் ஆகும்.

இது மட்டுமின்றி, காஸாவின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பொதுமக்கள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிடுவது, ஒரு குழுவின் தவறுக்காக ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வழங்கப்படும் தண்டனையாகும்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. ஆனால், சா்வதேச சட்டங்களைப் புறக்கணித்து பாலஸ்தீனா்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு அந்த உரிமையை நியாயமாக்க முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com