துபை அருகே கடலில் செயற்கையாக உருவாக்கப்படும் தீவுக் கூட்டம்! எண்ணற்ற கோடிகளில் விலை!

துபையையொட்டி கடலில் மணலைக் கொட்டி பெரும் பணக்கார்கள் வசிப்பதற்காக செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப்படும் குட்டித் தீவுக் கூட்டத்தைப் பற்றித் தெரியுமா?
துபை அருகே கடலில் செயற்கையாக உருவாக்கப்படும் தீவுக் கூட்டம்! எண்ணற்ற கோடிகளில் விலை!


துபையையொட்டி கடலில் மணலைக் கொட்டி பெரும் பணக்கார்கள் வசிப்பதற்காக செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப்படும் குட்டித் தீவுக் கூட்டத்தைப் பற்றித் தெரியுமா?

பாரசீக வளைகுடாவில் இருந்து மணல் எடுக்கப்பட்டு, கடல் பகுதியில் இவ்வாறு 300 குட்டித் தீவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிடத் தக்க அளவுக்குத் தீவுகள் உருவாக்கப்பட்டும் விட்டன. சில தீவுகளில் மனிதர்கள் தங்கிச் செல்லும் வசதிகளும் தொடங்கிவிட்டன.

இந்தத் தீவுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

துபை நகரம் இங்கு வாழும் மக்களின் மிக ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது. அதேபோல துபை நகரத்தில் உள்ள கட்டடங்களும் சுற்றுலா மாளிகைகளும் உலக மக்களை மெய்சிலிர்க்க வைக்கத் தவறியதே இல்லை எனலாம்.

உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா கட்டடத்திலிருந்து கலைநயம் குறையாத பிரம்மாண்ட அருங்காட்சியகங்கள் வரை துபையின் கட்டடக் கலை நம்மை பிரமிக்க வைப்பவை. அந்த அளவிற்கு கட்டட வேலைப்பாடுகள் அமைந்திருக்கும்.

ஆனால், இந்தத் துபை நகரையே பிரமிக்க வைக்கும் திட்டமாக உருவானதுதான் "உலகத் தீவுகள் திட்டம்.” உலகத் தீவுகள் என்றால் என்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் என்ன?

உலகத் தீவுகள் திட்டம்

உலகத் தீவுகள் என்பது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை.  இந்தத் தீவுகள் உலக வரைபடம் வடிவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. துபை, ஐக்கிய அரபு அமீரகத்தையொட்டியுள்ள கடலில் ஆழம் குறைந்த பகுதியில் மணலைக் கொட்டி செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இந்தத் தீவுகளை உருவாக்குவதற்கான மணல் பாரசீக வளைகுடாவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் முதலில் துபை அரசர் ஷேக் முகமது பின் ரஷித்தால் தொடங்கப்பட்டு, பின்னர் டச்சு நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2003  ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உலகத் தீவுகள் திட்டம், 2007-08 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் நிறுத்தி வைக்கப்பட்டது. 60  சதவிகிதத்துக்கும் மேலான தீவுகள் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2012  ஆம் ஆண்டு நிலவரப்படி, வணிக ரீதியாக லெபனான் பெயரிலான தீவு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. 

சுமார் 8  கி.மீ. தொலைவுக்கு இந்த உலகத் தீவுகள் திட்டம் பரந்து விரிந்துள்ளது. இங்கே 300 செயற்கையான தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீவும் 2.5 லட்சம்  சதுர அடி முதல் 9 லட்சம் சதுர அடி வரையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தீவுகளுக்கு பல கோடிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்  தீவுகளுக்கு சுற்றுலாவுக்காக வருபவர்கள் ஒரே இடத்தில் பல நாடுகளின் கலாசாரத்தை உணரும் விதமாக  ஆடம்பரமான உணவக விடுதிகள், நீரில் மிதக்கும் குடியிருப்புகள், பிரம்மாண்ட தனியார் விடுதிகள் போன்றன சிறப்பம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் குட்டித் தீவுகளை கோடிக்கணக்கில் செலவிட்டு வாங்குவதற்கு உலகப் பணக்காரர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஐரோப்பாவின் இதயம் திட்டம் 

துபையின் உலகத் தீவுகள் திட்டத்தைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் இதயம் என்ற திட்டம் துபையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில் உள்ள கட்டடங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவை இந்தத் தீவுகளில் உணரும் விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது. கடலில் நீருக்கடியில் வாழ்வது போன்ற  அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக இந்தத் தீவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. செயற்கையாக மழை மற்றும் பனிப் பொழிவு போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற உள்ளன. இந்தத் திட்டம் 2026  ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத் தீவுகள் திட்டம் பாதுகாப்பானதா?

பாரசீக வளைகுடாவில் நீர்  உயர்ந்து வருவதால் உலகத் தீவுகள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான தீவுகள் பாதுகாப்பற்றவை என்ற செய்திகளும் பல ஆண்டுகளாக வலம் வருகின்றன.

ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தீவுகளைப் பாதுகாப்பதற்காக தீவுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு அரணாக பாறைகள் கொட்டப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தீவுகளில் எந்த ஒரு ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. 

பருந்துப் பார்வையில் உலக வரைபடம் போல அழகாகக் காட்சியளிக்கும் இந்த செயற்கையான  தீவுக் கூட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. விலைக்கு வாங்க முடியாவிட்டாலும் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு முறை உலகத் தீவுகளுக்குச் சென்றுவர நாமும் முயற்சிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com