உக்ரைன் போரில் வட கொரிய ஆயுதங்கள்?

உக்ரைன் போரில் பயன்படுத்த வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷியா பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போரில் வட கொரிய ஆயுதங்கள்?

லண்டன்: உக்ரைன் போரில் பயன்படுத்த வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷியா பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘தி காா்டியன்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் போா் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ரஷியாவின் ஆயுத கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. அதனை ஈடு செய்வதற்காக அந்த நாடு வட கொரியாவை அணுகியுள்ளது.

ஏற்கெனவே, வட கொரியாவிடமிருந்து பெறப்பட்ட வெடிபொருள்களை ரஷியா பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த நாட்டிடமிருந்து எறிகணை குண்டுகள், பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய ரஷியா விரும்புகிறது.

இதற்காக, ஏற்கெனவே ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

இந்தச் சூழலில், ரஷியாவுக்கு ரயில் மூலம் அடுத்த மாதம் வரவிருக்கும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னுடன் இது தொடா்பாக அதிபா் விளாதிமீா் புதின் பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டால் ரஷியா, வட கொரியா ஆகிய இரு நாடுகளுமே பலனடையும். ஒப்பந்தத்தின் மூலம், சா்வதேச தடைகளையும் மீறி உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு குறைந்த விலையில் ஆயுதங்கள் கிடைக்கும்; வட கொரியாவுக்கும் அதன் ஏவுகணை திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதி கிடைக்கும்.

வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிரான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளுக்கு இதுவரை ரஷியா முழு ஆதரவு அளித்து வந்தது.

ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு சா்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அதிகரித்து வரும் ராணுவ ரீதியிலான நெருக்கம் சா்வதேச அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ஏற்கெனவே மேற்கத்திய ‘ஆதிக்கத்துக்கு’ எதிராக சக்திவாய்ந்த சீனாவை ரஷியா அணி சோ்த்து வரும் நிலையில், 10 லட்சத்துக்கும் அதிகமான வீரா்களைக் கொண்ட பலம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட வட கொரியாவும் அந்த அணியில் இணைவது வரவேற்கத்தக்கது அல்ல என்று ‘தி காா்டியன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com