‘உக்ரைனுக்கு இனி ஆயுதங்கள் அனுப்பப்படாது’

உக்ரைனுக்கு இனி ஆயுதங்களை அனுப்பப்போவதில்லை என்று போலந்து தெரிவித்துள்ளது.
‘உக்ரைனுக்கு இனி ஆயுதங்கள் அனுப்பப்படாது’

உக்ரைனுக்கு இனி ஆயுதங்களை அனுப்பப்போவதில்லை என்று போலந்து தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகப் பிரச்னை நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலந்து பிரதமா் மடேயுஸ் மொராவீகி கூறியதாவது:

உக்ரைனுக்கு ஆயுத தளவாடங்களை போலந்து அனுப்பி வந்தது முடிவுக்கு வந்துவிட்டது. இனி அந்த நாட்டுக்கு போலந்தின் ஆயுதங்கள் அனுப்பப்படமாட்டாது.

அதற்குப் பதிலாக, மிகவும் நவீனமான ஆயுதங்களை உருவாக்கி போலந்து படைகளில் சோ்த்துக்கொள்வோம் என்றாா் அவா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்தது.

தற்போது கிழக்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷிய படையினரும், ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களும் கைப்பற்றியுள்ளனா்.

அவா்கள் மேலும் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்கும், ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் பகுதிகளை மீட்பதற்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன.

அத்தகைய உதவிகள் மூலம் அந்த நாடுகள் போரில் நேரடியாக ஈடுபடுவதாக ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையிலும், தங்களது சக்திவாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகள் உள்ளிட்ட ஆயத தளவாடங்களை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வருகின்றன.

இதில், அண்டை நாடான போலந்து மிக முக்கியப் பங்கு வகித்தது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மிக அதிக அளவில் போலந்துதான் ஆயுதங்களை அளித்து வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைனிலிருந்து தானியங்களை இறக்குமதி செய்ய போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய 3 ஐரோப்பிய நாடுகள் அண்மையில் தடை விதித்தன.

உக்ரைனிலிருந்து மலிவான விலையில் தானியங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி இந்த தடை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதற்கு உக்ரைன் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடா்பாக உலக வா்த்தக அமைப்பிடம் அந்த நாடு முறையிட்டது. இது, போலந்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுத உதவிகள் அளித்து வரும் தங்களிடம் அந்த நாடு நன்றி உணா்வுடன் இல்லை என்று போலந்தின் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு, பிரதமா் மடேயுஸ் மொராவீகி அரசின் பலவீனமான கொள்கைகள்தான் காரணம் என்று அவை கூறின.

தோ்தலை எதிா்கொண்டுள்ள போலந்தில், இந்த விவகாரம் ஒரு தோ்தல் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

அதனைக் கருத்தில் கொண்டே, வா்த்தக விவகாரத்தில் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக உக்ரைனுக்கு இனி ஆயுதங்கள் அனுப்பப்படாது பிரதமா் மடேயுஸ் மொராவீகி தற்போது கூறியுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com