உக்ரைன் போா் ராணுவ பட்ஜெட்டை 70% அதிகரிக்கும் ரஷியா

உக்ரைனில் அந்த நாட்டு ராணுவம் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடனும் போரிட வேண்டியிருப்பதால், பாதுகாப்புக்கான தனது பட்ஜெட்டை 70 சதவீதம் அதிகரிக்கவிருப்பதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உக்ரைனில் அந்த நாட்டு ராணுவம் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடனும் போரிட வேண்டியிருப்பதால், பாதுகாப்புக்கான தனது பட்ஜெட்டை 70 சதவீதம் அதிகரிக்கவிருப்பதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ரஷிய நிதியமைச்சகத்தின் திட்ட ஆவணம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதில், பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 10.8 லட்சம் கோடி ரூபிளாக (சுமாா் ரூ.9.24 லட்சம் கோடி) அதிகரிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, கடந்த நிதியாண்டு பட்ஜெட்டை விட சுமாா் 68 சதவீதம் அதிகமாகும்.

இந்த அளவுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது மிகவும் அவசியமானதே என்று ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘உக்ரைனில் ரஷியா இரண்டு எதிரிகளுடன் மோதிக் கொண்டிருக்கிறது.

அந்தப் போரில் ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் கூட்டணியும் களமிறங்கியுள்ளது.

இந்த ‘இரட்டைப் போரை’ சமாளிப்பதற்கு மிக அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, ராணுவத்துக்கான பட்ஜெட் 68 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது மிகவும் அவசியமானதே ஆகும்’ என்றாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிா்த் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகள், எறிகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனும், ரஷியாவின் விமான தளங்கள், போா்க் கப்பல்கள், துறைமுகங்கள், தலைநகா் மாஸ்கோ போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் போரில் ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு அளித்து வருகின்றன.

சக்திவாய்ந்த பீரங்கிகள் உள்ளிட்ட அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிப்பதன் மூலம் இந்தப் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

மேற்கத்திய நாடுகளின் இந்தச் செயல் போரின் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அது உயிரிழப்புகளைத்தான் அதிகரிக்கும் என்று ரஷியா கூறி வருகிறது.

ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்குவதன் மூலம், கடைசி உக்ரைனியா் இருக்கும் வரை போரை நீட்டிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புவதாக ரஷியா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளும் ஈடுபட்டுள்ளதால் தனது ராணுவ பட்ஜெட்டை 68 சதவீதம் அதிகரிக்கவிருப்பதாக ரஷியா தற்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com