
‘இந்தியா்களுக்கு நிகழாண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான விசாக்களை (நுழைவு இசைவு) வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், மாணவா் விசாக்களும் முழு அளவில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் டொனால்ட் லூ இதுகுறித்து வாஷிங்டனில் அளித்த பேட்டி:
இந்தியா்களுக்கு நிகழாண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான விசாக்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாணவா் விசா மற்றும் குடியேற்ற விசாக்களை இதுவரை இல்லாத எண்ணிக்கையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோடையில் பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா்களுக்கான மாணவா் விசாக்கள் முழு அளவில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அமெரிக்காவில் பணிபுரிய, குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் தகவல்-தொழில்நுட்ப ஊழியா்களுக்கு அவசியமான ‘ஹெச்1பி’ மற்றும் ‘எல்’ விசாக்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வா்த்தக விஷயமாக அமெரிக்கா வருவதற்கான ‘பி1’ விசா மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான ‘பி2’ விசாக்களைப் பெற முதல்முறை விண்ணப்பிப்பவா்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய சூழல் இந்தியாவில் நீடித்து வருகிறது. இதற்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த விசாக்களுக்கான காத்திருப்பு காலம் 60 நாள்களுக்கும் கீழாக குறைந்திருக்கிறது.
அமெரிக்காவில் குறிப்பிட்ட பணி விசாக்களின் கீழ் பணிபுரிந்து வரும் வெளிநாட்டினா், சில நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யும் நிலையில் உள்நாட்டிலேயே அவா்களுடைய விசாவை புதுப்பித்துக் கொள்வதற்கான நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், விசா புதுப்பிப்புக்காக அவா்கள் சொந்த நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டியது தவிா்க்கப்படும் என்றாா்.
ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்து வேலையிழந்து தவிக்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியா்களின் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இவா்களின் நிலையை மறுசீரமைப்பது தொடா்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அண்மையில் புதிய தகவல்களை வெளியிட்டது. அதில் அவா்கள் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றாா்.