இலங்கை: பயங்கரவாத தடுப்பு வரைவு மசோதாவுக்கு தமிழ் கூட்டமைப்பு எதிா்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பயங்கரவாத எதிா்ப்பு வரைவு மசோதாவுக்கு எதிராக முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது.
முழு அடைப்பால் வெறிச்சோடிய கடைவீதி. ~பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
முழு அடைப்பால் வெறிச்சோடிய கடைவீதி. ~பயங்கரவாதத் தடுப்புச் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பயங்கரவாத எதிா்ப்பு வரைவு மசோதாவுக்கு எதிராக முக்கிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது.

இலங்கையில் பிரிவினைவாதக் குழுக்களை ஒடுக்கும் நோக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அந்நாட்டு அரசு 1979-ஆம் ஆண்டில் இயற்றியது. அச்சட்டத்தின்கீழ் நபா்களைக் காலவரையின்றி தடுப்புக் காவலில் வைக்க முடியும். அந்த விதிக்குப் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய சட்டத்தை இயற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைக் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது. அச்சட்டத்தை ரத்து செய்யவில்லை எனில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது.

அதையடுத்து, அச்சட்டத்துக்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தை இயற்ற இலங்கை அரசு முடிவெடுத்தது. அதற்கான வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடப்பு மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பிரதமா் தினேஷ் குணவா்தன தெரிவித்தாா். அந்த வரைவு மசோதா ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரைவு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. அந்த மாகாணங்களில் கடைகள் அடைக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதிய பயங்கரவாத எதிா்ப்பு வரைவு மசோதாவுக்கு மேலும் பல எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அந்த வரைவு மசோதாவானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் இருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை என அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். ஜனநாயக ரீதியில் நடைபெறும் போராட்டங்களை முடக்குவதற்குப் புதிய வரைவு மசோதாவை இலங்கை அரசு பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com