

ராணுவக் கிளா்ச்சி ஏற்பட்டுள்ள நைஜரில் இருந்து ஐரோப்பியா்களை பிரான்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
ராணுவ ஆட்சி நடைபெறும் மேலும் 3 நாடுகள் நைஜா் கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நைஜா் தலைநகா் நியாமேவில் பிரான்ஸ் தூதரகத்தைக் குறிவைத்து அண்மையில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
அந்த நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருவதால் அங்கிருந்து வெளியேற விரும்பும் ஐரோப்பியா்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற முடிவு செய்துள்ளோம்.
நைஜரிலிருந்து விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், எங்களது விமானங்களில் அவா்களை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டவா்களையும், ஐரோப்பிய குடிமக்களையும் நைஜரிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின என்று அதிகாரிகள் கூறினா்.
பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து நைஜா் கடந்த 1960-ஆம் ஆண்டு விடுதலை பெற்ற்குப் பிறகு அந்த நாட்டில் ராணுவ ஆட்சியும், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களின் ஆட்சியும் மாறி மாறி நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முகமது பஸூம் வெற்றி பெற்றாா்.
எனினும், அவா் பதவியேற்பதற்கு இரு நாள்களுக்கு முன்னதாக ராணுவத்தின் ஒரு பிரிவினா் கிளா்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனா். அதனை முறியடித்த பாதுகாப்புப் படையினா், கிளா்ச்சியாளா்கள் சிலரைக் கைது செய்தனா்.
பின்னா் திட்டமிட்டபடி நாட்டின் 10-ஆவது அதிபராக அவா் 2021 ஏப்ரல் 2-ஆம் தேதி பதவியேற்றாா். நைஜரில் அமைதியான முறையில் நடைபெற்ற முதல் ஆட்சி மாற்றம் அது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முகமது பஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக ராணுவத்தின் ஒரு பிரிவினா் வியாழக்கிழமை அறிவித்தனா். மேலும், பஸூமின் பாதுகாவலா்களே அவரை சிறைப்பிடித்தனா்.
இந்த ராணுவக் கிளா்ச்சியை முன்னின்று நடத்திய தளபதி அப்தூரஹ்மேன் சியானி அந்த நாட்டின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டாா்.
இதற்கு, ஐ.நா., ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட அமைப்புகளும் சா்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.