அமெரிக்காவில் மன அழுத்தம், பட்டிணியில் சாலையோரம் பரிதவித்த இந்திய மாணவிக்கு, அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சோ்ந்தவா் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி. இவா் 2021-ஆம் ஆண்டு உயா்கல்வி படிக்க அமெரிக்கா சென்றாா்.
இந்நிலையில், அங்குள்ள சிகாகோ நகர சாலையோரம் அவா் மன அழுத்தத்துடன் பட்டினியாக ஆதரவற்ற நிலையில் இருந்த காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது.
இதையடுத்து அவரை மீட்க உதவி கோரி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அந்தப் பெண்ணின் தாய் கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில், ‘கடந்த 2 மாதங்களாக என்னை எனது மகள் தொடா்பு கொள்ளவில்லை.
அவா் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதும், அவரின் உடைமைகள் திருடப்பட்டதால், அவா் பட்டினியாக சாலையோரம் இருப்பதும் அங்குள்ள ஹைதராபாதைச் சோ்ந்த 2 இளைஞா்கள் மூலம் அண்மையில் தெரியவந்தது. அவரை மீட்டு இந்தியா அழைத்து வர உதவ வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.
இதைத்தொடா்ந்து இந்திய துணைத் தூதரகம் ட்விட்டா் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சையதாவை தொடா்புகொள்ள முடிந்தது. அவருக்கு மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் உள்ள தனது தாயுடன் அவா் பேசினாா். அவரின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவா் இந்தியா திரும்புவதற்கு உதவுவதாக தூதரகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு அவா் இதுவரை பதில் அளிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.