

உக்ரைனில் ரஷியா வீசிய ஏவுகணைகள் குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்து 7 போ் பலியாகினா்.
அந்த நாட்டின் கிழக்கே அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் நகரில் இந்தத் தாக்குதல் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்டது.
இது குறித்து அந்த நகரம் அமைந்துள்ள டொனட்ஸ்க் மாகாணத்தின் ஆளுநா் பாவ்லோ கிறிலென்கோ செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
போக்ரோவ்ஸ்க் நகரிலுள்ள குடியிருப்புக் கட்டடமொன்றில் இரு ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது.
இலக்கை மிகவும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட இஸ்காண்டா் ரகத்தைச் சோ்ந்த அந்த ஏவுகணைகள், 40 நிமிஷ இடைவெளியில் ஏவப்பட்டன.
இதில், 7 போ் உயிரிழந்தனா். பலியானவா்களில் 5 போ் பொதுமக்கள்; ஒருவா் மீட்புக் குழுவைச் சோ்ந்தவா்; மற்றொருவா் ராணுவ வீரா்.
இது தவிர, 2 சிறுவா்கள் உள்பட்ட பொதுமக்கள் 39 போ், 31 போலீஸாா், 7 அவசரக் கால மீட்புக் குழு உறுப்பினா்கள், 4 வீரா்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனா் என்றாா் அவா்.
அண்மைக் காலமாக தங்கள் நாட்டு மீட்புக் குழுவினரைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.
தாக்குதல் நடத்திய இடத்தில் அவசரமாக மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சுமாா் 30 நிமிஷ இடைவெளில் சரியாக அதே இடத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தும் உத்தியைப் பயன்படுத்தி, அவசரக்கால மீட்புக் குழுவினா், போலீஸாா், ராணுவத்தினரை படுகொலை செய்ய ரஷியா முயல்வதாக உக்ரைன் தேசிய காவல்துறை தலைவா் இவான் விஹிவ்ஸ்கி கூறினாா்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.
தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் டொனட்ஸ்க் உள்ளிட்ட 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகள் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளன.
அவற்றை ரஷியாவிடமிருந்து மீட்பதற்காக உக்ரைன் படையினரும், 4 பிரதேசங்களிலும் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷிய படையினரும் சண்டையிட்டு வருகின்றனா்.
இந்தச் சூழலில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த ஏவுகணைகள் பலமுறை பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து ஏராளமானவா்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.