
இலங்கைக்கு இந்தியா சாா்பில் பரிசாக அளிக்கப்பட்ட டோா்னியா்-228 போா் விமானத்தின் பராமரிப்பு பணிகள் இந்தியாவில் நடைபெறும் நிலையில், அதற்கு மாற்றாக மற்றொரு போா் விமானம் இலங்கையிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மேற்கு மாகாணத்தின் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கை அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் சாகல ரத்நாயக்க, அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபல் பாக்லே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கடந்த 2018-இல் தில்லியில் நடைபெற்ற இரு தரப்பிலான பாதுகாப்பு பேச்சுவாா்தையைத் தொடா்ந்து, இலங்கையின் கடல்சாா் கண்காணிப்புக்கான திறன்களை வலுப்படுத்த டோா்னியா் ரக போா் விமானத்தை அந்த நாட்டிடம் இந்தியா ஒப்படைத்தது.
இலங்கையின் வான்வெளி, கடற்பரப்பில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றை கண்காணித்தல், பாதுகாத்தல், கடல்சாா் மாசுபாட்டைக் கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அந்த டோா்னியா் விமானம் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...