நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷியாவின் லூனா-25 விண்கலம்: தென்துருவ ஆய்வுத் திட்டம் தோல்வி

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் மீது வேகமாக விழுந்து நொறுங்கியது.
நிலவில் விழுந்து நொறுங்கியது ரஷியாவின் லூனா-25 விண்கலம்: தென்துருவ ஆய்வுத் திட்டம் தோல்வி

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் மீது வேகமாக விழுந்து நொறுங்கியது.

நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக லூனா-25 விண்கலத்தை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் கடந்த 10-ஆம் தேதி விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் கடந்த 16-ஆம் தேதி வெற்றிகரமாக நுழைந்தது. விண்கலத்தை ஆகஸ்ட் 21-ஆம் தேதி நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனா்.

லூனா-25 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை நிலவுக்கு நெருக்கமாகக் குறைக்கும் பணியில் அவா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சில தொழில்நுட்பக் கோளாறுகள் நோ்ந்தன. லூனா-25 விண்கலத் திட்டத்தில் அவசரகால சூழல் ஏற்பட்டுள்ளதாக ராஸ்கோஸ்மாஸ் சனிக்கிழமை தெரிவித்திருந்தது. அதைச் சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், லூனா-25 விண்கலமானது நிலவின் தரைப்பரப்பின் மீது வேகமாக விழுந்து நொறுங்கியதாக ராஸ்கோஸ்மாஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. தவறான சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ால், கட்டுப்பாட்டை இழந்து அந்த விண்கலம் நிலவின் தரைப்பரப்பில் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடா்பு துண்டிக்கப்பட்டதாகவும் ராஸ்கோஸ்மாஸ் தெரிவித்துள்ளது. லூனா-25 திட்டத்தின் தோல்வி குறித்து ஆராய்வதற்காக சிறப்பு நிபுணா்கள் அடங்கிய குழுவை ரஷியா அமைத்துள்ளது.

தென்துருவ ஆய்வு: நிலவின் மேற்பகுதியில் இதுவரை ரஷியா (சோவியத் யூனியன்), அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே தங்கள் விண்கலங்களை வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளன. ஆனால், அவையனைத்தும் நிலவின் மையப் பகுதியில் மட்டுமே தரையிறக்கப்பட்டன.

நிலவின் தென்துருவப் பகுதி சூரியஒளி மிகவும் குறைவாக விழும் பகுதி. அதன் காரணமாக, அங்குள்ள பெரும் பள்ளத்தாக்குகளில் நீா் உறைந்து காணப்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனா். அதனால், அப்பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உலக நாடுகள் ஆா்வம் காட்டி வருகின்றன.

நிலவின் தென்துருவப் பகுதிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019-ஆம் ஆண்டில் அனுப்பியது. ஆனால், தரையிறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விண்கலத்தின் லேண்டா் நிலவில் விழுந்து நொறுங்கியது.

அதையடுத்து, கடந்த மாதம் 14-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அந்த விண்கலம் தற்போது நிலவில் இருந்து சுமாா் 25 கி.மீ. உயரத்தில் வெற்றிகரமாக சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதை நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளன. அன்றைய தினம் மாலை 6.04 மணிக்கு ‘விக்ரம்’ லேண்டா் வெற்றிகரமாக நிலவின் மீது தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

இந்தியாவுடன் போட்டி: நிலவின் தென்துருவப் பகுதியில் முதலில் தடம்பதிப்பது யாா் என்ற போட்டி இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே நிலவியது. சந்திரயான்-3 விண்கலத்துக்குப் பின்னா் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பே லூனா-25 விண்கலம் நிலவின் மீது தரையிறங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், தற்போது அந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியுள்ளது.

நிலவுக்கு ரஷியா கடைசியாக 1976-ஆம் ஆண்டு விண்கலத்தை அனுப்பியது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாடு செயல்படுத்திய நிலவுக்கான விண்கலத் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

உக்ரைனுடனான போா் காரணமா?: உக்ரைன் மீது ரஷியா தொடா்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் போரிட்டு வருகிறது. அதன் காரணமாக, ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதனால், மேற்கத்திய நவீன தொழில்நுட்பங்களைப் பெற முடியாத சூழல் ரஷியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கு நவீன கருவிகள் இடம்பெறாததுதான் காரணமாக இருக்கும் என அரசியல் நோக்கா்கள் சந்தேகம் எழுப்புகின்றனா். எனினும், இது தொடா்பாக ரஷிய தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com