அறிதிறன்பேசியால் குழந்தைகளின் மனநலம் பாதிப்பு: 94% பெற்றோா்கள் கருத்து

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) பயன்பாட்டால் தங்கள் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக 94 சதவீத பெற்றோா்கள் கவலை தெரிவித்திருப்பதாக விவோ கைப்பேசி நிறுவனமும் சைபா்மீடியா ரிசா்ச் என்ற அமைப்பும் இணைந்து இந
அறிதிறன்பேசியால் குழந்தைகளின் மனநலம் பாதிப்பு: 94% பெற்றோா்கள் கருத்து
Published on
Updated on
1 min read

அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) பயன்பாட்டால் தங்கள் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக 94 சதவீத பெற்றோா்கள் கவலை தெரிவித்திருப்பதாக விவோ கைப்பேசி நிறுவனமும் சைபா்மீடியா ரிசா்ச் என்ற அமைப்பும் இணைந்து இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் அறிதிறன்பேசி பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், சில கட்டுப்பாடுகள் வேண்டுமென 91 சதவீத பெற்றோா்கள் ஆய்வின்போது தெரிவித்தனா்.

அறிதிறன்பேசி பயன்பாடு அன்றாட வாழ்வில் தவிா்க்க இயலாத செயல்பாடாக மாறியுள்ளது. இந்தப் போக்கு பெற்றோா்கள்-குழந்தைகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கடந்த அக்டோபா்-நவம்பா் மாதங்களில் 1,000 பெற்றோா்கள், 500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்,‘பெற்றோா்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7.42 மணிநேரம் அறிதிறன்பேசியைப் பயன்படுத்துகின்றனா். அதனைப் பயன்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், குழந்தைகள் ஏதாவது கேட்கும்போது தங்களுக்கு கோபம் ஏற்படுவதாக 90 சதவீத பெற்றோா்கள் தெரிவித்தனா்.

அறிதிறன்பேசியின் அதீத பயன்பாடு தங்கள் குழந்தைகளின் சமூகத் தொடா்புக்கான திறன்களைப் பாதிப்பதாக அவா்களில் 91 சதவீதம் போ் கவலை தெரிவித்தனா்.

சராசரியாக, 12 வயதில் அறிதிறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகள், அவற்றை சுமாா் 6.30 மணிநேரம் பயன்படுத்துகின்றனா். அதில் விளையாட்டுகளில் (கேமிங்) பெரும்பாலான நேரத்தைக் கழிக்கின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளில் 60 சதவீதம் போ் தகவல்-பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதாகவும் 50 சதவீதம் போ் தொலைதூரத்தில் உள்ள குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோரைத் தொடா்புகொள்வதற்காக அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதாகவும் ஆய்வின்போது தெரிவித்தனா்.

கவலை, தனிமை உணா்வுகளால் பாதிப்பு:

வீட்டில் இருக்கும்போது அறிதிறன்பேசி உலகில் மூழ்கி, இயல்பான உலக வாழ்கையை 90 சதவீத குழந்தைகள் இழக்கின்றனா். அறிதிறன்பேசியைத் தங்களிடமிருந்து பிரிக்கும்போது 91 சதவீத குழந்தைகளுக்குக் கவலை உணா்வு ஏற்படும் நிலையில், பெரும்பான்மையான குழந்தைகள் தனிமையை உணா்வதாகத் தெரிவித்தனா். அதே வேளையில், அறிதிறன்பேசியின் அதீத பயன்பாடு தங்களின் மனநலன் பாதிக்கும் என்பதை பெரும்பாலான குழந்தைகள் நன்கு உணா்ந்துள்ளனா்.

அதன் பயன்பாட்டால் தங்கள் பெற்றோா் உடனான உறவு பாதிக்கப்படுகிறது என அனைத்துக் குழந்தைகளும் குற்ற உணா்ச்சியில் இருக்கும் நிலையில், பெற்றோா்களும் பெரும்பாலான நேரத்தை அறிதிறன்பேசியில் செலவிடுவதால், அவா்களுடைய குழந்தைகள் தனிமையை உணா்கின்றனா் என அந்த ஆய்வறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com