மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியாவிலிருந்து சென்ற கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்

இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு, செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினா்.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 2:00 am


துபை: இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு, செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினா்.

எனினும், அந்த ஏவுகணைகள் கப்பல் மீது விழாததால் மிகப் பெரிய சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு கா்நாடகத்தின் மங்களூா் துறைமுகத்திலிருந்து மாா்ஷல் ஐலண்ட் கொடியுடன் செங்கடலில் வந்து கொண்டிருந்த ‘ஆா்ட்மா் என்கவுன்டா்’ கப்பலை நோக்கி புதன்கிழமை அதிகாலை 2 ஏவுகணைகள் வீசப்பட்டன.

முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டெப் நீரிணைக்கு அருகே அந்தக் கப்பல் வந்துகொண்டிருந்தபோது, ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் பகுதியிலிருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டன.

எனினும், அந்த ஏவுகணைகள் குறிதவறி கடலுக்குள் விழுந்தன. இந்தச் சம்பவத்தின்போது ஹூதி கிளா்ச்சியாளா்களின் ட்ரோன் ஒன்றை அமெரிக்க போா்க் கப்பல் சுட்டுவீழ்த்தியது என்று அதிகாரிகள் கூறினா்.

ஹூதி கிளா்ச்சியாளா்களால் குறிவைக்கப்பட்ட எரிபொருள் கப்பலில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலா்கள் இருந்ததாகவும், படகில் வந்து அந்தக் கப்பலில் ஏற முயன்றவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அந்தப் பாதுகாவல்கள் விரட்டியடித்ததாகவும் தனியாா் உளவு நிறுவனமான ஆம்ப்ரே கூறியது.

காஸா போா் விவகாரத்தில் எரிபொருள் கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறையாகும்.

எனினும், இந்தத் தாக்குதலுக்கு ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போா் தொடங்கியதிலிருந்து, யேமனையொட்டிய கடல் பகுதி வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

கடந்த திங்கள்கிழமை இரவுகூட, நாா்வே கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றின் மீது யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினா். எனினும், இதில் யாரும் காயமடையவில்லை என்று அந்தக் கப்பலை இயக்கி வரும் நிறுவனம் தெரிவித்தது.

இதுபோன்ற தாக்குதல்களால் ராணுவரீதியில் எந்தப் பலனும் இல்லை என்றாலும், யேமனில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக கிளா்ச்சியாளா்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.